News

Wednesday, 04 November 2020 06:05 PM , by: Daisy Rose Mary

Credit :Daily Thanthi

திண்டுக்கல் மாவட்டத்தில் மையமிட்டுள்ள பச்சை வண்ண வெட்டுக்கிளிகள், சோளப் பயிர்களை தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், நத்தம் உள்ளிட்ட வட்டாரங்களில் சோளம், மக்காச்சோளம் ஆகியவை அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. அவ்வப்போது பெய்து வரும் மழையால் பயிர்கள் ஓரளவு வளர்ந்து வருகின்றன. இதற்கிடையே, பயிர்களை படைப்புழு தாக்குதல், பூச்சி தாக்குதல் மற்றும் பல நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வந்தனர்.

வெட்டுக்கிளிகள் தாக்குதல்

இந்நிலையில், திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன. பச்சை நிறத்தில் இருக்கும் அந்த வெட்டுக்கிளிகள், குறிப்பாக சோளம் பயிரிட்டுள்ள வயல்களை குறி வைத்து வருகின்றன.

சோள வயல்களை குறிவைக்கும் வெட்டுக்கிளிகள்

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள், சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்கு படையெடுக்கின்றன. பின்னர் அவை சோள பயிர்களில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகை அனைத்தையும் முழுமையாக தின்று விடுகின்றன. ஒரு வயலில் சோள பயிர்களின் தோகையை தின்று முடித்ததும், அடுத்த வயலுக்கு கூட்டமாக படையெடுத்து செல்கின்றன. பூத்தல், கதிர் பிடித்தல் பருவத்தில் இருக்கும் சோள பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் கதிர் பிடித்த சோள பயிர்களும், வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் கதிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

 

50 ஏக்கர் பரப்பளவில் சேதம்

வெட்டுக்கிளிகள் தாக்ககுதலால் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஏக்கர் சோள பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை தாக்கிவந்த நிலையில், தற்போது திண்டுக்கல்லில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

ரூ.50,000 செலவழித்தும் ரூ.5000க்கும் கூட வழியில்லை! - ஏரியில் தக்காளியை கொட்டிய விவசாயிகள்!

வெங்காய விலை எப்போது குறையும்? - வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு!!

ரேஷன் கடை மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் - மத்திய அரசு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)