புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சந்தைபடுத்த வேளாண் விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், தட்டாஞ்சாவடி, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்ததந்த பகுதி விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து உரிய விலையை பெற்று வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாய விளை பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் விசவசாயிகள் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகினர். பயிர் விளைவிக்கு முடிந்த அவர்களால் அதனை சந்தைப்படுத்துவதற்கும், பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் போக்குவரத்து இல்லாமல் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில், சற்று தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் விவசாய வேளாண் விற்பனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நிலக்கடலை வரத்து அதிகரிப்பு
இந்த வேளாண் விற்பனை குழு மையத்தில், ஏராளமான நிலக்கடலை விவசாயிகள் தங்கள் நிலக்கடலை, பயறு வகைகளை அதிகமாக கொண்டு வந்து விற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள விருத்தாசலம் மார்க்கெட்டில் விளை பொருட்கள் என்ன விலைக்கு விற்பனை ஆகிறதோ அதற்கேற்ப விலை நிர்ணயித்து உரிய தொகையை புதுச்சேரி விவசாயிகளுக்கும் உடனடியாக வழங்கப்படுகிறது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல் வரத்து குறைவு
பொதுவாக இந்த காலகட்டத்தில், நெல் அறுவடை முடிந்து ஆகஸ்டு மாதம் வரை இந்த மையங்களில் நெல் விற்பனை களைகட்டுவது வழக்கம். தினமும் சுமார் 800 மூட்டை முதல் 1,000 மூட்டை நெல் விற்பனைக்கு வரும். மற்றும் நிலக்கடலை, பயறு வகைகளும் விற்பனை செய்யப்படும். நெல் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை அதிக அளவில் விவசாயிகள் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
நெல் கொள்முதல் தொடக்கம்
இந்திய உணவு கழகம் சார்பில், புதுச்சேரி மாநிலத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கன்னியக்கோவில், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கரையாம்புத்தூர், மதகடிப்பட்டி பகுதிகளில் நெல் கொள்முதலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
இந்த காரணத்தாலும், கரையாம்புத்தூர் மதகடிப்பட்டு பகுதிகளில் நெல் கொள்முதல் செய்யப்படுவதால் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நெல்லின் வரத்து குறைந்துள்ளது. கன்னியக்கோவில் மற்றும் கூனிச்சம்பட்டு பகுதியிலும் விரைவில் இந்திய உணவுக்கழகம் விரைவில் நெல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அங்கு நெல் கொள்முதல் செய்யப்படும் போது நகரப் பகுதிக்கு வண்டிகளில் நெல் கொண்டு வந்து விற்பனை செய்வது குறையும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழக விவசாயிகள் பங்களிப்பு
புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண் விற்பனை குழு மையங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும் அதிக அளவில் தங்கள் விவசாய விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். வியாபாரிகளும் பாரபட்சமின்றி உரிய விலை கொடுத்து விவசாய பொருட்களை வாங்கிக்கொள்கின்றனர்.