அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் 143 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2017 ஜூலையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது.
ஜிஎஸ்டி வரி (GST Tax)
அத்தியாவசியப் பொருட்கள் உட்பட சில பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில், அடுத்தடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடிவரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், இந்த வரி விகிதங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்பு வரி குறைக்கப்பட்ட பொருட்களுக்கு மீண்டும் வரி உயர்த்தப்பட உள்ளது.
143 பொருட்கள் (143 items)
அதன்படி, அப்பளம், வெல்லம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட உள்ளது. வால்நட், கஸ்டர்ட் பவுடர், சூயிங்கம், ஆல்கஹால் சேர்க்கப்படாத குளிர்பானங்கள், வாசனை திரவியங்கள், சவரப் பொருட்கள், தோல் பொருட்கள், ஆடைகள், கைக்கடிகாரம், சூட்கேஸ், கண்ணாடி, கண்ணாடி பிரேம்கள், பவர் பேங்க், செராமிக்சிங்க், வாஷ் பேசின், வீடியோ கேமராக்கள், கதவுகள், ஜன்னல்கள், சுவிட்ச் போர்டு, 32 இன்சுக்கு கீழுள்ள கலர் டிவி உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் அதிகரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அக்ரூட் பருப்புக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கஸ்டர்ட் பவுடருக்கு 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், மேஜை மற்றும் சமையலறை பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் வரி உயர்த்தப்படலாம். இது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஜிஎஸ்டியை பொறுத்தவரை தற்போது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு அடுக்குகளில் வரி விதிக்கப்படுகிறது. தற்போது வரி உயர்த்தப்பட இருக்கும் 143 பொருட்களில் 93 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்கில் இருப்பவை. அவற்றை 18 சதவீத அடுக்கில் இருந்து 28 சதவீத அடுக்குக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் 1 சதவீதம் அதிகரிக்கப்படும்போது அரசுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க
பழங்கள் வாங்கினால் புத்தகம் இலவசம்: பழ வியாபாரி அசத்தல்!
புதிய தொழிலாளர் சட்டம்: கூடுதல் வார விடுமுறைக்கு வாய்ப்பு இருக்குமா?