முன்னறிவிப்பின்றி விவசாய நிலம், மனை நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது என செய்திகள் பரவிய நிலையில் அதுக்குறித்து உரிய விளக்கம் அளித்துள்ளது பத்திரப்பதிவு துறை. இதுத்தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவே தான் 01.04.2023 முதல் ஏற்கனவே, அதாவது 08.06.2017 அன்று இருந்த வழிகாட்டி மதிப்பிற்கு மாற்றியமைக்கப்பட்டது.
மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு மிக மிக குறைவாக இருந்ததால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லையென 27.07.2023 அன்று நடைபெற்ற பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
எனவே, மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்று ஏகமனதாக கோரிக்கை வைத்தனர். மேலும் வினைநில மதிப்பும் சில இடங்களில் மிக மிக குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(AA) ன் படி பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுக்குழு 16.08.2023 அன்று கூடி இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு அந்தந்த மநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிகளுக்கு குறைந்தப்பட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக கொண்டுள்ள தெரு/சர்வே எண்களுக்கு மட்டுமே இம்மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது.
அனைத்து தெரு/சர்வே எண்களுக்கும் வழிகாட்டி மதிப்பானது மாற்றியமைக்கப்படவில்லல. எனவே, ஒரு சில ஊடகங்களில் முன்னறிவிப்பின்றி வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது என்று வந்துள்ள செய்தி தவறான செய்தி ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது http://tnreginet.gov.in என்ற பதிவுத்துறைவின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாத சுபமுகூர்த்த தினம்:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தகவல் தெரிவித்திருந்தார்.
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை ஏற்று ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான 21.08.2023 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும்.
12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க: