அரசு பஸ்களில், 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் எடுக்கலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அரசு பஸ்களில், 3 வயது வரை இலவச பயணம் அனுமதிக்கப்பட்டு இருந்தது. நகர பஸ்களைத் தவிர, மற்ற பஸ்களில், 3 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'அரை டிக்கெட்' என்ற பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
அரை டிக்கெட் (Half Ticket)
இந்நிலையில், போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் சிவசங்கர், இனி, 5 வயது வரை குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படும் என்றும், 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை டிக்கெட் சலுகை வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதையடுத்து, நேற்று முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளை, அனைத்து பஸ்களிலும் இலவச பயணத்துக்கு அனுமதிக்கலாம் என நடத்துனர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: தொலைதுார பஸ்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.
அந்த குழந்தைகளை மடியில் வைத்து அழைத்துச் செல்வதில் சிரமம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். அவ்வாறு கருதுவோர், குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி இருக்கை பெறலாம். முன்பதிவிலும் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க