வங்கிகளில் லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு முதியோர் ஓய்வூதியம் பெறுவோரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
20 ரூபாய் ஓய்வூதியம்
தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியத்திட்டம், 1962ல் தொடங்கப்பட்டபோது, முதற்கட்டமாக மாதம் 20 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இந்தத் தொகைப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு அதிரடி
இந்நிலையில் தகுதியில்லாத முதியவர்களும், 1000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், தி.மு.க அரசு சார்பில், நலத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள், தகுதியானவர்கள் தானா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் உண்மைத்தன்மை கண்டறிய, அவர்களிடம் ஆதார் எண் பெறப்பட்டது.
லட்சம் ரூபாய்
இதன் மூலம், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ள விபரங்கள், அவர்களது பெயரில் சொத்துக்கள் இருக்கிறதா என்பது போன்ற விபரங்கள் கண்டறியப்பட்டு, பட்டியலிடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறும் முதியோர் பெயரில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் இருந்தால், நிதியுதவியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் நிறுத்தம்
இதுகுறித்து, வருவாய்த்துறையினர் கூறியதாவது:
ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவதே ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம். வசதி உள்ளவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. பலருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. சிலர், மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கின்றனர். வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால், நிதியுதவி நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...