இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 3 கோடி குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 30 லட்சம் குழந்தைகள் மரணிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில், ஓராண்டில் நடக்கும் 5-6 ஆயிரம் பிறந்த குழந்தை மரணங்களில் 15% முதல் 20% நிமோனியாவால் நடக்கின்றன. பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தை மரணங்களுக்கான முதன்மையான காரணமாக நிமோனியாவாகவே உள்ளது. எனவே நிமோனியா காய்ச்சலை விரைந்து கண்டறியும் பயிற்சியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.
நிமோனியா தாக்கம்
Social Awareness and Action to Neutralise Pneumonia Successfully என்ற மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மையங்களில் இந்த பயிற்சிகள் இந்த மாதம் நடக்கவுள்ளன. குழந்தை நல அரசு மருத்துவர்கள் 500 பேர், 45 மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலகர்கள், 45 மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். தாய்ப்பால் முறையாக கிடைக்காத குழந்தைகள், சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத குழந்தைகள், வீட்டுக்குள்ளாக உள்ள காற்று மாசு ஆகிய காரணங்களால் நிமோனியா தாக்கம் அதிகமாகிறது.
இது குறித்து மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், "நவம்பர் 15 முதல் 21ம் தேதி வரை, பச்சிளம் குழந்தைகள் வாரம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த வாரத்தில் 0-30 நாட்கள் மட்டுமேயான குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்தாலும் வீடுகளிலும் இருந்தாலும் அனைவரையும் நேரில் சந்தித்து, நிமோனியா விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எக்ஸ் ரே எடுப்பதற்கு முன்பாகவே முதல் கட்ட அறிகுறிகளை வைத்தே நிமோனியாவை கண்டறிவதற்கான பயிற்சியும் வழங்கப்படும். நோயின் எந்த கட்டத்தில் குழந்தை உள்ளது என்பதை கண்டறிந்து எந்த நிலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். நிமோனியா என்பது தடுக்கக்கூடியதே. அதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.
மேலும் படிக்க
மழைக்கால மின் விபத்துகளைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
60 ஆண்டு கால கனவு நனவாகுமா? அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விறுவிறு!