சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், இயற்கை ஏதாவது ஒரு வகையில், மனிதனின் உடல் நலனை காக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சென்னைக்கு அருகே உள்ள கிராமங்களில், கீரை விவசாயம், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கீரை விவசாயம்
சென்னை, செங்குன்றம் அருகே, கோணிமேடு, லட்சுமிபுரம், மேட்டுப்பாளையம், பம்மதுகுளம், எராங்குப்பம், கிருஷ்ணாம்பேட்டை, பழைய பம்மதுகுளம், சரத்கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள், பசுமை பின்னணியில், கீரை விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளன. இந்த கிராமங்களில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஆண், பெண் என பலரும், விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்த்தல் தொழிலை உற்சாகமாக செய்து வருகின்றனர். இங்கு, 100 ஏக்கரில், அரைகீரை, சிறு கீரை, முருங்கை கீரை (Drumstick), தண்டு கீரை, பொன்னாங்கன்னி கீரை, புளிச்ச கீரை, மணத்தக்காளி கீரை, பாளை கீரை, முடக்கத்தான் கீரை, கரிசலாங்கன்னி, வெண்டைக்காய், பாகற்காய், காராமணி உள்ளிட்டவை விளைகின்றன.இந்த கிராமங்களில் இருந்து தினமும், காலை, மாலை இரு வேளையும், அனைத்து வகையான கீரையும்
பறிக்கப்பட்டு, 15 முதல், 20 டன் வரை, சரக்கு வாகனங்கள் மூலம், சென்னை சந்தைக்கு (Chennai Market) கொண்டு செல்லப்படுகிறது.
விற்பனை
சென்னை, அம்பத்துார், ஆவடி, தி.நகர், அண்ணாநகர், கோயம்பேடு என, பெரிய சந்தைகள் மட்டுமின்றி, செங்குன்றம், மாதவரம், கொளத்துாரில் உள்ள சிறிய கடைகளுக்கும், எடுத்து செல்லப்படுகின்றன. கீரை தோட்டங்களில், 8 முதல் 10 ரூபாய்க்கு கிடைக்கும் கீரை கட்டு, சென்னை சந்தைகளில், 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உரிய நேரத்தில் சந்தைக்கு சென்றால் தான், மொத்தமும் விற்பனையாகும். காலதாமதமானால், மறுநாள் இருப்பு வைத்து விற்க முடியாத நிலையில், குப்பையில் தான் வீசப்படும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் (Corona Lockdown) மீன், இறைச்சி கடைகள் மூடப்பட்ட நிலையில், மக்கள், தங்களின் உடல் நலம் காக்க, கீரை, காய்கறிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கீரை விதை மற்றும் உரத்தின் விலை அதிகரித்தாலும், மருத்துவ குணமுள்ள, உடல் நலம் காக்கும் கீரையை விளைவித்து, உரிய நேரத்தில் அறுவடை (Harvest) செய்து, மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கீரை, காய்கறிகளுக்கான வரவேற்பு, கடந்தாண்டு முதல் அதிகரித்து உள்ளது எனறு பழைய பம்மதுகுளம் விவசாயிகள் தெரிவித்தனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கோடை வெயில் சுட்டெரிப்பதால், பனை நுங்கு விற்பனை அமோகம்!
கோடை உழவில் ஆர்வம் காட்டும் திருப்பரங்குன்றம் விவசாயிகள்!