தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் ஜான் பிரதீப் தனது x வலைத்தளத்தில் அடுத்த சில நாட்களுக்கான தமிழக வானிலைத் தொடர்பாக ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி என பதிவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு-
கெட்ட செய்தி என்னவென்றால், மே 1 முதல் மே 4 ஆம் தேதி வரை தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் பகுதிகளில் அதீத வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நல்ல செய்தி என, மே-5 க்கு பிறகு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம் கூறுவது என்ன?
இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதன் அடிப்படையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
26.04.2024 முதல் 29.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
26.04.2024 முதல் 30.04.2024 வரை: தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: (26.04.2024 முதல் 30.04.2024 வரை): காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: (26.04.2024 முதல் 30.04.2024 வரை) அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் வானிலைத் தொடர்பான விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more:
வெப்ப அலை: கால்நடை கொட்டகையினை எப்படி ரெடி செய்வது?
TNAU: நெல் வயலில் உரமிடும்- களையெடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமை!