மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் (Fahrenheit)வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில்
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. நேற்றும் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்-ஐ கடந்தது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அடுத்தப்படியாக திருச்சியில் 106.5, திருத்தணியில் 106.1, மதுரை விமான நிலையத்தில் 104.7 டிகிரி பாரன்ஹீட், வேலூரில் 103.8, நாமக்கல்லில் 103.1, சேலத்தில் 102.3 வெப்பநிலை பதிவானது.
விவசாய பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மதுரை, திருச்சி, தர்மபுரி, கரூர், சேலம், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் (Heat wave )பகல் நேரங்களில் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனிடையே, வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், இதனால் மீனவர்கள் யாரும் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் , தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக் கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி அல்லது பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம், இதனால் வருகிற 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்குத் தென் தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு இரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடமாநிலங்களுக்கு ரெட் அலர்ட் (Red alert )
courtesy : The Hans India
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம் இருக்க வட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டி வருகிறது. வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு 117 டிகிரி பாரன்ஹீட் (Fahrenheit)அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகக்கூடும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.