கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன் பகுதியில் 3 செ.மீ வரை மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 7 மற்றும் 8 ஆம் தேதி தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக RMC chennai தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 7 மற்றும் 8- கனமழைக்கு வாய்ப்பு:
மேலும் தனது செய்திக்குறிப்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு- (05.05.2024 மற்றும் 06.05.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
08.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.05.2024 மற்றும் 10.05.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 தினங்கள்- வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: (04.05.2024-08.05.2024): அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி?
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: (04.05.2024 முதல் 06.05.2024 வரை)- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
Read more:
ஆட்டுக் கொல்லி: செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இலவச தடுப்பூசி!
மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?