தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் நேற்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குளச்சல், முட்டம், மண்டைக்காடு, கொட்டில்பாடு, குறும்பனை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், இன்றும் அந்த பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், குளச்சல், கொட்டில்பாடு, கோடிமுனை, குறும்பனை, முட்டம், மண்டைக்காடு மீனவ கிராமங்களை சேர்ந்த 3000 மேற்பட்ட கட்டுமரம் மற்றும் விசைப்படகு மீனவர்களும் (Fishers) கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, பெரியார் நகர் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் கனமழை பெய்தது.
திருப்பூரில் இன்று காலை 10 மணி முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், புஷஅபா ரவுண்டானா, ஊத்துக்குளி சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் பிற்பகல் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேல் இந்த கனமழை நீடித்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் வெள்ளத்தால் சிக்கி தவித்தனர். தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஏராளமான பக்தர்கள் செல்ல முடியாமல் தவிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் திடீரென பெய்த மழை காரணமாக சாலை மற்றும் கடைகளில் வெள்ளம் புகுந்தது.
மிக கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் (Puviyarasan) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி,கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை(அக்.,17) கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில், தர்மபுரியில் 7 செ.மீ., வேலூர் மாவட்டம் பொண்ணை, அணைக்கட்டு, நாகர்கோயில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டபட்டி, திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா- லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அக்.,16, 17 ல் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., அவ்வப்போது 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
இன்று வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
மேலும் படிக்க
மீனவர்களுக்கு 90% மானியத்தில் மோட்டார் படகு! என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?