தமிழகத்தில் கோடைக்காலத்தில் எதிர்ப்பாராத விதமாக தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது. மேலும், ஆழ்கடல் சென்றுள்ள மீனவர்கள்(23.05.2024)-க்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
தீவிர புயலுக்கு வாய்ப்பு:
நேற்று வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை (24.05.2024) காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
மேலும், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனடிப்படையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு-
23.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர். தேனி, இண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.05.2024 முதல் 29.05.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலைத் தொடர்பான மேலும் விவரங்களுக்கு Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும்.
Read more:
பூசா பாஸ்மதி 1979- பூசா பாஸ்மதி 1985 அரிசி வகைகளின் விதை விற்பனை தொடக்கம்!
STI HUB திட்டம்: மீன் கழிவுகளை உரமாக மாற்றும் கேரளப் பெண்ணிற்கு குவியும் பாராட்டு