வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை அதிகப்பட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது. அதனைத்தொடர்ந்து சேலம் மேட்டூர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை, திருவண்ணாமலை கலசப்பாக்கம், மதுரை மேலூர், பெரம்பலூர் லப்பைக்குடிகாடு போன்ற பகுதிகளில் தலா 3 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பினை சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
12.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஊருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.07.2023 முதல் 18.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மேலும் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அதுத்தொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துக்கொள்ள Mausam.imd.gov.in/Chennai என்ற இணையதளத்தினை காணலாம் எனவும் சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
Central Bank of India: 1000 மேனேஜர் காலி பணியிடம்- விண்ணப்பிக்கும் முறை?