கடுமையான வறட்சி நிலையிலும் குறைந்த தண்ணீர் தேவைப்படும் மற்றும் அதிக மகசூல் தரும் தக்காளி வகைகளை ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
மாறிவரும் காலநிலைகளுக்கு ஏற்ப வேளாண் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் முதன்மையானது பருவநிலை மாற்றங்களை எதிர்க்கொண்டு வளரும் வகையிலான தாவரங்களை கண்டறிய மரபணு வகையிலான சோதனை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் ப்ரோசீடிங்ஸ் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் (PNAS- Proceedings of the National Academy of Sciences) இதழில் வெளியிடப்பட்ட தக்காளி குறித்த ஆய்வானது, ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் வேளாண்மை, உணவு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பேராசிரியர் டானி ஜமீர், முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஷாய் டோர்கெமன் ஆகியோரால் நடத்தப்பட்டது.
தக்காளி மரபணுவின் இரண்டு வகைகளுக்கு இடையிலான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இதன் விளைவாக நீர்ப்பாசன நிலைமைகள் மற்றும் வறட்சியின் போது ஒட்டுமொத்த விளைச்சலில் 20% முதல் 50% அதிகரிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திறந்த நிலங்களில் வளர்க்கப்படும் தக்காளிக்கு பூச்சி மற்றும் உர பாதுகாப்பு தேவைப்படுகிறது, அத்துடன் வழக்கமான நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. எவ்வாறாயினும், உலகளாவிய காலநிலை நெருக்கடி மற்றும் கடுமையான நீர் பற்றாக்குறைகளுக்கு ஏதுவாக விவசாயிகளுக்கு போதுமான வருமானத்தை உறுதி செய்யும் புதிய வகைகள் மற்றும் சாகுபடி உற்பத்தி முறைகளை உருவாக்குவது அவசியமாகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இரண்டு தக்காளி இனங்களை ஆய்வுக்கு எடுத்தனர். மேற்கு பெருவின் பாலைவனங்களிலிருந்து ஒரு காட்டு தக்காளி மற்றும் பயிரிடப்பட்ட தக்காளி ஆகியவற்றில் மரபணுவின் எந்தப் பிரிவுகள் விளைச்சல் போன்ற முக்கியமான விவசாய பண்புகளை பாதிக்கின்றன என்பதை தீர்மானிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.
தனிப்பட்ட மரபணுக்கள் விவசாய கருவுறுதலில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், இந்த மரபணு பகுதிகளை ஒன்றாக இணைத்து ஆய்வு செய்த போது, அவை வறண்ட நிலையிலும் பயிர் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை அளித்தன.
ஜமீரின் ஆய்வகம் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,400 தாவரங்களின் டிஎன்ஏ வரிசைமுறை மற்றும் விரிவான தரவுகள் குறித்து பகுப்பாய்வு நடத்தியது. இந்த புதிய தக்காளி வகைகளை வணிகமயமாக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் "Horizon 2020" அறிவியல் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"புவி வெப்பமடைதலின் போது, விவசாயிகளுக்கு மாறிவரும் வானிலை நிலைமைகளை சமாளிக்கும் வகையில் சாகுபடி செய்ய ஏற்ற தக்காளி தேவை" என்று டார்ஜ்மேன் விளக்கினார். புவி வெப்பமடைதல் அதிக வெப்பநிலையை மட்டுமல்ல, திடீர் மழை அல்லது வறட்சி போன்ற தீவிர வானிலையையும் ஏற்படுத்துவதால், நமக்கு அனைத்து காலநிலைகளையும் திறம்பட எதிர்க்கொண்டு வளரும் வகையிலான தாவரங்கள் தேவை" என்றார்.
Photo courtesy: Shai Torgeman/Hebrew University
மேலும் காண்க: