நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனால், வெளியூரில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக நேற்றும் (ஆக.,12), இன்றும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சிறப்பு பேருந்து (Special Bus)
விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப போதுமான பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, பல்வேறு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால் கோயம்பேட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு, பெருங்களத்தூர், செங்கல்பட்டு சுங்கச்சாவடி உள்பட பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில், கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் வெளிப்படையாகவே கூடுதல் கட்டணம் குறித்த விவரங்கள் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அதிகபட்சமாக 4,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு3870 ரூபாயும், மதுரைக்கு 3000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சமானிய மக்கள் அரசு பேருந்து சேவையை தான் நம்பி உள்ளனர்.
அரசு போக்குவரத்து துறை சார்பில், நேற்று கோயம்பேட்டில் இருந்து 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இன்று 185 பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க
வாடகை வீட்டிற்கும் ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு அறிவிப்பு!
5 ரூபாய்க்கு சிறுதானிய ஸ்நாக்ஸ்: ஸ்டார்ட்அப் நிறுவனம் அசத்தல்!