தஞ்சையில் கருவேப்பிலை விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கருவேப்பிலை (Curry leaves) தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் கருவேப்பிலை சில நாட்களுக்கு முன்பு விலை உயர்ந்து காணப்பட்டது. கருவேப்பிலையில் மருத்துவகுணங்கள் (Medical benefits) மற்றும் பல்வேறு சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. காரத்துடன் கூடிய கசப்பு சுவையை கொண்ட கருவேப்பிலையை சைவ-அசைவ உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.
விலை உயர்வு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி (Cultivation) செய்யப்படும் கருவேப்பிலை தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்க்கெட் மற்றும் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறி வாங்குவோர்களுக்கு இலவசமாக கருவேப்பிலை கொடுப்பது வழக்கம். கருவேப்பிலை கடந்த வாரம் மொத்த விற்பனை (Whole sale) கடையில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்ததுடன் கருவேப்பிலையை விலை கொடுத்து குறைந்த அளவே வாங்கி சென்றனர்.
பூச்சி தாக்குதல்
இந்த நிலையில் தஞ்சை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கருவேப்பிலை விலை குறைந்துள்ளது. ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கருவேப்பிலை (Curry leaves) தற்போது விலை குறைந்து, ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சை தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் (Merchants) கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையாலும், நிவர் மற்றும் புரெவி (Nivar & Burevi) புயல்களாலும் கருவேப்பிலை சாகுபடி பெரிதும் பாதிப்பு அடைந்தது. மேலும் பனி பொழிவுகளால் பல்வேறு பூச்சி தாக்குதலும் (Pest attack) ஏற்பட்டது.
இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இதனால் கருவேப்பிலை வரத்தும் குறைவாக காணப்பட்டது. தற்போது மழை இல்லாததாலும், பனி குறைந்துள்ளதாலும், வெயில் அடிக்க ஆரம்பித்ததாலும் கருவேப்பிலை விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும் தொடர்ந்து இதே காலநிலை இருந்தால் கருவேப்பிலை விளைச்சல் அதிகரிக்கவும், மேலும் விலைகுறையவும் வாய்ப்பு உள்ளது. சில நாட்கள் வரை விலை அதிகரித்து காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் தற்போது விலை குறைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!
முதல் நாளே போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!