கரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்திய முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்தது. அவசர கால முடிவு என்ற போதும் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆவார்கள். அரசு மட்டுமல்லாது அனைவரும் இதனால் பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் சந்தித்து வருகின்றோம். ஊரடங்கு உத்தரவினால் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு அரசு சில நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த ஒரு அலசல்
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் முதல் தவணை தொகையான ரூபாய் இரண்டாயிரம் ஏப்ரல் முதல் வாரத்திலேயே, 8.7 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்றாலும், அதனை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்திருப்பது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலான விஷயம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி புரிவோருக்கு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து நாளொன்றுக்கு இருபது ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 14 கோடி குடும்பங்களுக்கு ரூ.2000 கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.
பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைத்து சாமானியர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் , மூன்று மாதங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் பொதுவினியோக கடைகள் அனைத்திலும் போதிய அளவு உணவு தானியம் கையிருப்பு இருப்பதாகவும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் புதிய உத்வேகம் பெற வேண்டுமென்றால், கிராமவாசிகளின் கைகளில் அதிக பணம் புழங்க வேண்டும் என்ற பொருளாதார வல்லுனர்களின் கூற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டதாக தோன்றுகிறது.
மொத்தத்தில் பிரதமமந்திரி கரீப் கல்யாண் நிவாரண தொகுப்பு சிறு குறு விவசாயிகள், விவசாயக் கூலிகள் என அனைவரின் உடனடி தேவைகளான உணவு தானியம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒரு சிறிய தொகையை வழங்கி விடும் என்றே நம்புவோம்.
தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை நமது வேளாண் துறை கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காண்பித்துள்ளது எனலாம்.
ஏற்றுமதிதடை செய்ததை அடுத்து அவற்றை நம்பி இருந்த பெரும்பாலான விவசாயிகள் செய்வதறியாது அவற்றை நீர்நிலைகளில் கொட்டும் அவல நிலைதான் நீடிக்கிறது. இதனால் இதனை நம்பி இருக்கும் எண்ணற்ற விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று.
G. ஷியாம் சுந்தர்