பயிர்களில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்தவும், விதை சேமிப்பிற்கும் விதை (Seed Treatment) நேர்த்தி செய்வது அவசியம். விதை நேர்த்தி செய்வதால், பயிர்களை நோய்கள் தாக்காமல், மகசூலும் (Yield) அதிகரிக்கும். அதோடு, அடுத்த முறை, விதைப்பிற்கும் விதைகளை, சேமித்து வைக்க முடியும் என்பதால், விவசாயிகள் விதை நேர்த்தி முறையை கையாள்வது எப்படி என்று நிச்சயம் அறிய வேண்டும்.
விதை நேர்த்தியின் அவசியம்:
மண், நீர், காற்று, விதைகள் மூலம் பூஞ்சாண நோய் (Fungal disease) மற்றும் பாக்டீரியா நோய்கள் (Bacterial disease) பரவுகின்றன. விதை நேர்த்தி செய்வதன் மூலம், பயிர்களை நோயில் இருந்து பாதுகாக்கலாம். விதை அழுகல், நாற்று அழுகலில் இருந்து பாதுகாத்து, விதையின் முளைப்புத்திறனை (Seed germination) அதிகரிக்கிறது. என்னென்ன பயிர்களுக்கு, எந்த வகையான விதை நேர்த்தி செய்ய வேண்டும் என்பதை, தெரிந்து கொள்ளலாம். மானாவாரி பயிர்களுக்கு உயிர் உரம், பூஞ்சாணக் கொல்லி மற்றும் விதை கடினப்படுத்துதல் (Seed hardening) முறைகளில் விதைநேர்த்தி செய்யலாம். உயிர் உரங்கள், மண்ணில் கரையாமல் உள்ள மணிச்சத்தை கரையச் செய்தும், காற்றில் உள்ள தழைச்சத்தை பயிரின் வேர்களில் சேமிக்கவும் உதவுகின்றன. இதன் மூலம் உரச்செலவை குறைப்பதோடு இரசாயன உரங்களால் மண்ணில் ஏற்படும் மாசுக்களையும் குறைக்கலாம்.
உயிர் உர விதை நேர்த்தி:
நெல்லுக்கு அசோஸ்பைரில்லம் லிப்போபெரம் (Azospirillum lipoperum) நுண்ணுயிர் உரம், நிலக்கடலை, பயறு வகைகளுக்கு ரைசோபியம் (Rhizobium), மற்ற பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் பிராசிலென்ஸ் (Azospirillum brasilensa) நுண்ணுயிர் உரம் பயன்படுத்த வேண்டும். கரையாத கூட்டுப்பொருளாக உள்ள மணிச்சத்தை கரையச் செய்து பயிருக்கு எளிதில் கிடைக்கும் உரமாக மாற்றுவதற்கு பாஸ்போ பாக்டீரியா (Phospho bacteria) பயன்படுகிறது.
ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன் தலா ஒரு பொட்டலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய கஞ்சியில் கலந்து, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். திரவ உயிர் உரமாக இருந்தால் தலா 50 மில்லி இரண்டையும், ஆறிய கஞ்சியில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு தலா ஒரு பொட்டலம் ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியாவும் திரவ உயிர் உரமாக இருந்தால், தலா 50 மில்லி அளவு கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்தி, 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். இந்த உரங்கள், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும்.
பூஞ்சாண கொல்லி விதைநேர்த்தி முறை:
மண்ணின் மூலம் பரவக்கூடிய வேர் அழுகல், நாற்று அழுகல், வாடல் நோய், இலைவழி பரவும் குலைநோய், இலையுறை கருகல், இலைப்புள்ளி, ஆந்த்ராக்னோஸ் நோய் (Anthracnose disease) பாதிப்பை குறைப்பதில், சூடோமோனஸ் (Pseudomonas) மற்றும் டி.விரிடி (D.Vrity) இவற்றின் பங்கு அதிகம். நெற்பயிரைத் தாக்கும் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான் பாதிப்பை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை (Anti-Biotic) அதிகப்படுத்துகிறது.
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ், 4 கிராம் டி.விரிடி இரண்டும் கலந்தோ தனித்தனியாக கலந்தோ விதை நேர்த்தி செய்யலாம். இவற்றை மற்ற பூஞ்சாணக் கொல்லி, பூச்சி மருந்துகளுடன் கலக்கக்கூடாது. உயிர் உரங்களுடன் கலந்து பயன்படுத்தலாம்.
விதை கடினப்படுத்துதல்:
இராமநாதபுரத்தில், பருவமழையை நம்பியே நெல் விதைப்பு நடை பெறுகிறது. சில நேரங்களில், தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் வறட்சியை தாங்க முடியாமல், துவண்டு விடுகின்றன. இதற்கு விதை கடினப்படுத்துதல் அவசியம்.
ஒரு ஏக்கருக்கு தேவையான நெல் விதையுடன், 300 கிராம் பொட்டாஷ் உரத்தை (Potash fertilizer), 30 லிட்டர் தண்ணீரில் கரைத்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், நிழலில் உலர்த்தி, 24 மணி நேரம் கழித்தோ அல்லது ஒரு மாதம் வரை வைத்திருந்தோ விதைக்கலாம். இந்த விதைகளை, உயிர் உரங்களுடனோ அல்லது பூஞ்சாணக் கொல்லியுடனோ, விதைப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக கலந்து பயன்படுத்தலாம். விதைக் கடினப்படுத்துவதால், விதை முளைக்கும் வீரியம் துாண்டப்படுவதோடு, பயிர் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
கண்ணையா, வேளாண் துணை இயக்குனர்.
சீதாலட்சுமி, வேளாண் அலுவலர்.
உழவர் பயிற்சி நிலையம்,
பரமக்குடி
94420 49291.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
வெங்காயத்தைப் பாதுகாக்கும், பழங்கால வெங்காயப் படல் முறையில், விற்பனையும், விதை சேமிப்பும்!
கோவில்பட்டியில் மழை இல்லாததால் கருகும் பயிர்கள்! பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றிவரும் விவசாயிகள்! கைகொடுக்குமா அரசு!
நடப்பாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு தான் அதிகம்!