மீன்வளர்ப்பில் புதுமையான முன்னெடுப்பு மற்றும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த ராமேஸ்வரம் மீன் பண்ணையாளர் குழுவுடன் ICAR-CIBA புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ICAR-CIBA ஆனது, ராமேஸ்வரம் சிகரம் மீன் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்புடன், மீன் கழிவுகளில் இருந்து பெறப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளான பிளாங்க்டன் பிளஸ் (Plankton Plus) மற்றும் ஹார்டிபிளஸ் (HortiPlus) ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கமானது, மீன்வளர்ப்பு மற்றும் விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் அதே வேளையில் நிலையான நடைமுறைகளை வலுப்படுத்துவதாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள்:
ICAR-Central Institute of Brackishwater Aquaculture (CIBA) தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் சிகரம் மீன் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ள நிலையில் அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
Plankton Plus பயன்கள் என்ன?
ICAR-CIBA-Plankton Plus என்பது நுண்ணிய மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய அடர்த்தியான ஹைட்ரோலைசேட் ஆகும். இது மீன்வளர்ப்பு முறைகளில் இயற்கையான உற்பத்தியை அதிகரிக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, ஒடிசா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு உற்பத்தி அதிகரிப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மீன்வளர்ப்புக்கு அப்பால் பிளாங்க்டன் பிளஸ், விவசாயத்தில் குறிப்பாக நெல் சாகுபடியில் அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது. ICAR-CIBA, சென்னையில் உள்ள A.M.M முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் நெற் பயிர் சாகுபடியில் மேற்கொண்ட சோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது.
Hortiplus பயன்கள் என்ன?
இரண்டாவது தயாரிப்பான ICAR-CIBA-Hortiplus, விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. பிளாங்க்டன் பிளஸ் மற்றும் ஹார்டிபிளஸ் ஆகிய இரண்டும் ராமநாதபுரத்தில் மீன்வளர்ப்பு மற்றும் விவசாயத்தில் சோதனை செய்யப்பட்டன. ICAR-CIBA-DBT திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ”DBT கிராமிய உயிர் வள வளாகத்தை” நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. நேர்மறையான முடிவுகளைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் சிகரம் மீன் பண்ணையாளர் உற்பத்தியாளர் அமைப்பு இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது.
ICAR-CIBA இயக்குனர் டாக்டர் குல்தீப் கே.லால், இந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதன் தேசிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், இது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது, பிளாங்க்டன் பிளஸைப் பயன்படுத்தி கரிம நெல் சாகுபடியின் திறனை அதிகரிக்கலாம் எனவும் அவர் தனது உரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார். இதன் மூலம், விவசாயிகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை நம்பியிருப்பதை குறைக்க இயலும், அதே நேரத்தில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
ICAR-CIBA யில் உள்ள Kakdwip ஆராய்ச்சி மையத்தின் தலைவர் Dr. Debasis De, விவசாய நிறுவனங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையங்கள் இடையேயான கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தார். ICAR-CIBA -யின் இன்ஸ்டிட்யூட் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் யூனிட் (ITMU) ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், பல முக்கிய பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
6 வது ஆண்டில் PM-KMY: குறைந்த பிரீமியத்தில் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!
தென்னை இலையில் V வெட்டு & வளர்ச்சி பாதிப்பு- காண்டாமிருக வண்டுக்கு தீர்வு என்ன?