அரிசி வாங்காத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என குடுமைப்பொருள் வழங்கல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தான் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, வசதி படைத்தோர்கூட அந்த அட்டையை வாங்கிவைத்துக்கொண்டு, அரிசி வாங்காமல் இருப்பது தொடர்கிறது.
புதுச்சேரியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு விதமான குடும்ப அட்டைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதில், சிவப்பு ரேஷன் அட்டை ஏழை மக்களுக்கும், மஞ்சள் வண்ண அட்டை அரசு ஊழியர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக, பலரும் சிவப்பு நிற குடும்ப அட்டையை முறைகேடாக வாங்கி ஏழை மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களை பெற்று வருகின்றனர். இதனால் பல ஏழை குடும்பத்தினருக்கு அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைவதில்லை என புகார்கள் எழுந்துள்ளது.
இதேபோல், தமிழ்நாடு - புதுச்சேரி எல்லைப்பகுதியான முத்தியால்பேட்டை, கனகச்செட்டிக்குளம், கன்னிக்கோவில், சேதராபட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமிழ்நாடு, புதுச்சேரி என இரண்டு மாநிலங்களிலும் ரேஷன் கார்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், புதுச்சேரி மாநில சிவப்பு வண்ண ரேஷன் கார்டு பயனாளிகளை தணிக்கை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே மாநில குடிமைப்பொருள் வழங்கல்துறையின் இயக்குனர் சக்திவேல் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா((PM-GKAY) இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு அனைத்து சிவப்பு அட்டைத்தாரர்களுக்கும் குடும்ப அட்டையிலுள்ள நபர் ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ வீதம் இலவசமாக அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படுகிறது.
இந்த இலவச அரிசியை வரும் 20ம் தேதிக்குள் பெறவேண்டும். இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் போன்ற அறிவிப்பை தமிழக அரசும் வெளியிடத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...