தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் மூடுபனி நிலவும் நிலையில், இன்று முதல் அடுத்த 3 தினங்களுக்கு (cold wave) குளிர் அலைக்கான எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடும் பனியினை அடுத்து விமானம் மற்றும் ரயில் சேவைகளும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் அடர்த்தியான மூடுபனி நிலவுவதால், பார்வைத் தன்மை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி, பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டதாகவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்வைத்திறன்- பூஜ்ஜியம்:
கங்காநகர், பாட்டியாலா, அம்பாலா, சண்டிகர், பாலம், சஃப்தர்ஜங், பரேலி, லக்னோ, பஹ்ரைச், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் தேஜ்பூர் ஆகிய முக்கிய நகரங்களின் சாலைகளில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக முதல் முறையாக நடப்பாண்டில் பதிவாகியுள்ளது.
ரயில் சேவை பாதிப்பு:
பூர்னியா, திப்ருகர், கைலாஷாஹர் மற்றும் அகர்தலா போன்ற பகுதிகளில், பார்வைத் திறன் 25 மீட்டராகக் குறைந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் குறைந்தது 22 ரயில்கள் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பயணத்தின் போது மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்துமாறும் IMD வலியுறுத்தியுள்ளது. மேலும், அபாயகரமான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளில், பார்வைத் திறன் மேம்படும் வரை பயணத்தை தவிர்க்குமாறும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தப்பட்ச வெப்பநிலை எவ்வளவு?
ஜனவரி 14-ம் தேதி குளிரான அலை வீசும் என்று வானிலைத் துறை எதிர்பார்க்கிறது, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 19 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். ஜனவரி 13 ஆம் தேதியான நேற்று, இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) வெளியிட்ட அறிக்கையின்படி, வெப்பநிலை 3.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
இந்த குளிர்காலப்பருவத்தில் டெல்லியில் பதிவான மிக குறைந்த வெப்பநிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 15 ஆம் தேதி வரை இதே போன்ற நிலைமைகள் உத்தரப் பிரதேசம் பகுதியில் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) மாலை 4 மணியளவில் 399 ஆக இருந்தது. இது "மிகவும் மோசமான" வகைக்குள் வருகிறது. 24 மணிநேர AQI அளவுகோலில் காற்றின் தரம் (0-50) க்குள் இருக்கும் பட்சத்தில் 'நல்ல சுற்றுச்சூழல்’ எனவும் (401-500) இருக்கும் பட்சத்தில் ”கடுமையான/மோசமான சுற்றுச்சூழல்” எனவும் மதிப்பிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Read also:
அடிக்கிற குளிருக்கு அத்திப்பழம் சாப்பிடுவது நன்மைத் தருமா?
அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!