கரோனா வைரஸின் எதிரொலியாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைக்க துவங்கி உள்ளனர். இதன் விளைவாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. மக்களின் தேவையற்ற பீதியின் காரணமாக அசைவ உணவான கோழியை தவிர்த்து கடல் உணவுகளை உண்ண தொடங்கி உள்ளனர். இதனால் மீன்களின் விலை 30% முதல் 40% வரை அதிகரித்துள்ளது.
சென்னையை அடுத்த காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்கள் நகரின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகிறது. தினமும், இப்பகுதியை சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். 15 முதல் 18 டன் வரை மீன்கள் விற்பனைக்கு வருகிறது. அதன் மூலம் ரூ.20 கோடிக்கு வர்த்தகம் நடை பெறுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தினமும் மீன்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலாலும், கோழிகளை உண்பதால் கரோனா தாக்கும் என்கிற தவறான கருத்தாலும் அசைவ பிரியர்கள் மீன்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர், என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காசிமேடு மீனவர் சங்கத்தினர் கூறுகையில், கரோனா பீதியால் மீன் விற்பனையும் தடைபடும் என்று எண்ணி மக்கள் அதிகமாக வாங்குவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது மீன்களை வாங்கி சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். மேலும் மீன் விலை உயர்வு என்பது தற்காலிகமானது என்று கூறினார்.