மத்திய அரசு கடந்தாண்டு இறுதியில் எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் உள்நாட்டு எண்ணெய் வித்துகளுக்கான நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு உற்பத்தியை பெருகுவதற்கு ஊக்குவித்தது. இதற்கு முக்கிய காரணம் குறுகிய கால பயிராகவும், குறைந்த பாசன வசதி, மற்றும் குறைந்த சாகுபடிச் செலவு என்பதே ஆகும்.
கரோனா தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியினை முற்றிலும் தடை விதித்துள்ளது. நமது நாட்டை பொறுத்தவரை 60 சதவீதம் தாவர எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது. உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதால் எண்ணெயின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு விவசாயிகள் லாபம் தரக்கூடிய எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததே எண்ணெய் வித்துப் பயிர் சாகுபடி குறைந்ததற்கு காரணம் என்கிறார்கள். எனவே தற்போது உருவாகியுள்ள இந்த சூழல் நாட்டையும், தனி மனிதனையும் சுய சார்புடையவர்களாக மாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.