ஆண்டுக்கு ஒருமுறை பனியில் விளையும் காராமணி பயிர் மகசூல் இந்த ஆண்டு 60 சதவீதம் வரை குறைந்ததால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழக விவசாய முறை பருவத்திற்கு ஏற்ப பயிர் செய்வதில் பாரம்பரிய பெருமை கொண்டது. வடகிழக்கு பருவ மழை முடிந்து, பனிக்காலம் துவங்கும் போது புஞ்சை நிலங்களில் ஈரப்பதம், மிதமான வெயில், பனிப்பொழிவை பயன்படுத்தி எள், உளுந்து, காராமணி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் இந்த மூன்று பயிர்களையும் பனிப்பயிர்கள் என அழைக்கப்படுகிறது. இதில் எள், உளுந்து பயிர் தமிழகம் முழுவதும் சாகுபடி செய்கின்றனர்.
காராமணி பயிர்கள் (Cowpea Crops)
இளஞ்சிவப்பு நிறத்தில், சிறிய ரக காராமணி பயிர்கள் வட தமிழகத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதியில் மட்டும் விளைகின்றன. இந்த வகை பயிர்கள் வளர தேவையான மண் வளம் இங்கு மட்டுமே உள்ளது. இந்த பயிர் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விளையும். இந்த ரக காராமணி பயிர்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.
அங்கு தினசரி முக்கிய உணவாக இந்த காராமணி பயிரை பயன்படுத்துகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் ஏக்கர் காராமணிசாகுபடி செய்யப்படுகிறது. இதற்கான விதைகளை வேளாண்மைத் துறையினர் வழங்குவதில்லை. தனியார் கடைகளில் கிலோ 130 ரூபாய்க்கு வாங்கி விவசாயிகள் விதைக்கின்றனர். 90 நாட்களில் மகசூல் எடுத்து விடுவார்கள்.
விதைக்கப்பட்ட 15வது நாளில் இருந்து பூச்சிக் கொல்லி, பூஞ்சான கொல்லி, பயிர் ஊக்கி என 5 முதல் 7 முறை மருந்து அடிக்கின்றனர். இதற்காகவும் பயிர் செலவாகவும் ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். 7 முதல் 5 மூட்டை (ஒரு மூட்டை 100 கிலோ) வரை மகசூல் கிடைக்கும். மார்க்கெட் கமிட்டியில் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை இதற்கு விலை கொடுக்கின்றனர்.
மகசூல் பாதிப்பு (Yield Loss)
எனவே, மற்ற பயிரை விட இதில் கூடுதல் லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு சாகுபடி செய்த பயிர்கள் செழித்து வளர்ந்தன. பூவும் வைத்தது, ஆனால் காய் பிடிக்கவில்லை. மகசூல் ஏக்கருக்கு 2 மூட்டை அளிவிற்கே கிடைத்துள்ளது. 60 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் மகசூல் எடுக்காத விவசாயிகள் காய் பிடிக்க மீண்டும் பயிர் ஊக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
விதைகள் வழங்க கோரிக்கை (Request for seeds)
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடைகளில் வாங்கிய விதைகள் தரமற்றவையாக இருக்கலாம் அல்லது மரபணு மாற்றம் செய்த விதையாகவும் இருக்கலாம். மகசூல் குறைய என்ன காரணம் என தெரியவில்லை. வேளாண்மைத் துறையினர் காராமணி பயிர்கள் காய் பிடிக்க எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. அடுத்த ஆண்டு வேளாண்மைத் துறையினர் காராமணி விதைகளை விரிவாக்க மையங்கள் மூலம் வழங்க வேண்டும். அத்துடன், காராமணி சாகுபடி செய்யும் விவசாயிகளை கண்காணித்து போதிய ஆலோசனை வழங்க வேண்டும்' என்றனர்.
மேலும் படிக்க
வீடுகளில் மீன் வளர்க்க ஆசையா? உதவக் காத்திருக்கிறது பயோ பிளாக் தொழில்நுட்பம்!