தமிழகம், கேரளாவில் மிளகு விளைச்சல் பாதிப்பால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி, ஊட்டி, கொடைக்கானல், கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலும், இதை தவிர கேரளாவில் இடுக்கி, குமுளி உள்பட பல பகுதிகளிலும் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மிளகு சாகுபடி நடக்கும்.
மிளகு சாகுபடி (Pepper Cultivation)
கடந்தாண்டு பெய்த தொடர் மழையால், கேரளாவில் பல இடங்களில் மிளகு செடிகள் நீரில் மூழ்கியது. அதேபோல் தமிழகத்திலும் மிளகு செடிகள் அழிந்தன. இதன் காரணமாக கடந்தாண்டை விட நடப்பாண்டு மிளகு விளைச்சல் 25 முதல் 30 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் மிளகின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சேலம் மளிகை வியாபாரிகள் கூறுகையில், நடப்பாண்டு மிளகு சாகுபடி செய்திருந்த இடங்களில் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு மிளகு வரத்து சரிந்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ மிளகு ₹350 முதல் ₹390 என விற்பனை செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக ₹600 முதல் ₹650 என விற்பனை செய்யப்படுகிறது. மிளகு விளைச்சல் அதிகரிக்கும்போது விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர். விலை அதிகரிப்பால் இலாபம், விவசாயிகளுக்கு கிடைத்தால் அது மகிழ்ச்சி தான். ஆனால், இந்த இலாபம் வியாபாரிகளுக்கு தான் கிடைக்கும்.
மேலும் படிக்க