Importance of Agriculture during the reign of King Thondaiman
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே ஆத்தங்கரை விடுதி ஊராட்சி கீழவாண்டான் விடுதி வயல்வெளியில், விசய ரெகுனாதராயத் தொண்டைமானாரால் ஏற்படுத்தப்பட்டது தான் விசய ரெகுநாதாய சமுத்திரம் எனும் நீர்ப்பாசனம். இந்த பாசனத்தில் நீர்நிலை ஏற்படுத்தி, அதற்கான நீர் வெளிப்போக்கு அமைப்பான கலிங்கு அமைத்தது குறித்த தகவலடங்கிய புதிய கல்வெட்டு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன், நிறுவனர் மணிகண்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு (Inscription)
கல்வெட்டு குறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், இயற்கை வளங்களை போற்றி வளர்ப்பதிலும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வழங்குவதிலும் சிறந்து விளங்கினர். குறிப்பாக தொண்டைமான் மன்னர்களின் சிறப்புகளாக, அவர்கள் அமைத்த நீர் நிலைகளையும், அரச நிர்வாக கட்டமைப்புகளையுமே வரலாற்று ஆய்வாளர்கள் பெருமிதமாக கூறுகின்றனர். இருப்பினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் தொண்டைமான் மன்னர்களின் பெயரில் நீர்நிலை அமைக்கப்பட்டது குறித்த கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாக சான்றுகள் இல்லை.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் (Importance to Agriculture)
இந்நிலையில், கீழவாண்டான் விடுதி கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பின் மூலம், நுhற்றாண்டு விழா காணும் ராஜகோபால தொண்டைமான் முன்னோரும் இரண்டாவது மன்னருமான விசயரெகுநாதராய தொண்டைமான் பெயரில் அமைந்திருந்த பாசனநீர் நிலை, தொண்டைமான்கள் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக கிடைத்துள்ளது. கல்வெட்டுச்செய்தியும் முக்கியத்துவமும் இந்தக் கல்வெட்டில் ஸ்ரீவிசயரகுநாத ராயசமுத்திரம் அற்கிரகாரத்து கலிங்கில் என்ற தகவல் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் கீழ் பகுதியில் ஏர் கலப்பையுடன் ஒரு விவசாயி நின்ற நிலையில் வரைக்கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அருகிலுள்ள துவார் கிராமத்தில் அக்கிரகாரம் என்ற குடியிருப்பு பகுதி இருந்திருப்பது குறித்து மக்கள் செவிவழிச்செய்தியாக தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, தொண்டைமான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது மன்னர் விசயரகுநாதராய தொண்டைமான் ஆட்சிக்காலமான பொ.ஆ 1730 முதல் 1769 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்தபாசன நீர்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மன்னரின் பெயரிலேயே விசயரெகுனாதராய சமுத்திரம் என்று பெயர் சூட்டப்பட்டு அர்ப்பணித்திருப்பதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது என்றார்.
மேலும் படிக்க
மண்வளத்தைப் பெருக்க சிறந்த வழி ஆட்டுக் கிடை போடுதல்!
மதுரைப் பெண்ணின் இயற்கை விவசாயம்: உழவன் அங்காடியில் விற்பனை!