தமிழகத்தில் மல்லிகைப்பூ உற்பத்தியில் புகழ் வாய்ந்தது மதுரை. இங்கு மாட்டுத்தாவணியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மலர்களை விவசாயிகள் கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து செல்வார்கள். அதனை மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள்.
இந்த மார்க்கெட்டில் தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மலர்களை வாங்கி செல்வார்கள். தற்போது வருகிற 8-ந் தேதி ஓணம் பண்டிகை நடைபெற உள்ளது.
இதையொட்டி கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது வீடுகள் முன்பு பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் போட்டு வருகின்றனர். இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு மதுரையில் இருந்து பூக்கள் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் பூக்களின் விலை திடீரென கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300-க்கும், பிச்சிப்பூ ரூ.700-க்கும், முல்லைப்பூ ரூ.800-க்கும், சம்பங்கி பூ ரூ.150-க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200-க்கும், செண்டுமல்லி ரூ. 80-க்கும் விற்பனையானது. இது பற்றி மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறும்போது, கடந்த 1 வாரமாக மழை பெய்து வருவதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஓணம் பண்டிகை மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க:
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு