பீகாரில் 81,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடமிருந்து இதுவரை வழங்கப்பட்ட ஊக்கத்தொகையினை திரும்பப்பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அரசு.
இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டம் (PM kisan சம்மான் நிதி) 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு- ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 14 தவணைகள் உழவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 15-வது தவணை பெறுவதற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தான், பீகார் மாநிலத்தில் தகுதியற்ற 81,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட அரசின் ஊக்கத்தொகையினை திரும்பப் பெறும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அரசு வங்கிகளை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தகுதியற்ற விவசாயிகள்- காரணம் என்ன?
”அரசு மேற்கொண்ட முறையான ஆய்வுக்குப் பிறகு, பீகாரில் மொத்தம் 81,595 விவசாயிகள் (2020 முதல்) பிஎம் கிசான் திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் (45,879 வருமான வரி செலுத்தியவர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக 35,716 பேர்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தின் விவசாயத் துறையானது, பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைத்து வங்கிகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தொகையானது சுமார் 81.6 கோடி ரூபாய் மதிப்பிலானது" என்று இயக்குனர் (வேளாண்மை) அலோக் ரஞ்சன் கோஷ் பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (எஸ்எல்பிசி) சமீபத்திய கூட்டத்தில், விவசாயிகளிடமிருந்து வசூல் செயல்முறையைத் தொடங்குவதற்கு முதன்மையான முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தகுதியற்ற விவசாயிகள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு, இதுக்குறித்து புதிய நினைவூட்டல்களை வழங்கவும், அத்தகைய வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கிகளால் இந்த விவசாயிகளிடம் இருந்து இதுவரை 10.3 கோடி ரூபாய் அளவிலான பணம் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்துள்ளார்.
PM கிசானின் 13-வது தவணை பிப்ரவரி 27, 2023 அன்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 14-வது தவணையினை ஜூலை 27, 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் நடைப்பெற்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 15-வது தவணை வரும் டிசம்பர் மாதம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க: