தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தினால் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தின் தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழல் ARG பகுதியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கைத் தொடர்பான அறிக்கையினை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
30.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.10.2023 முதல் 06.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள்: (30.09.2023 மற்றும் 01.10.2023) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: (30.09.2023) இலங்கை கடலோரப்பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்க 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: (30.09.2023) கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு mausam.imd.gov.in/chennai என்கிற இணையதளத்தை காணவும்.
இதையும் காண்க:
தொடர்ந்து ஒரு வாரமாக விலை வீழ்ச்சி- தங்கத்தில் முதலீடு செய்தோர் கலக்கம்
இந்த 196 மாடல் தான்- பம்புசெட் மானியத்தில் கவனிக்க வேண்டியவை