கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணி இன்று தொடங்கிய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மதியம் 2 மணி வரை 84,170 (16.69%) குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், டோக்கன் வரிசைப்படி அனைவருக்கும் 3.1.2024-க்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த அதிகனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளமும் அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு ரூ.6000/-, மாவட்டத்தில் ஏனைய பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.1000/- நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிப்படைந்துள்ள தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம்,சேரன்மகாதேவி,திருநெல்வேலி,பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதிக பாதிப்படைந்த கடற்கரை கிராமங்கள் மற்றும் அருகாமை பகுதிகளான இராதாபுரம் வட்டம், லெவிஞ்சிபுரம், செட்டிகுளம், கூடன்குளம், விஜயாபதி மற்றும் திருவம்பலாபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்கள், திசையன்விளை வட்டம், திசையன்விளை,அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்து புதூர்,கரைசுத்து உவரி மற்றும் குட்டம் ஆகிய 6 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.6000/- வீதமும் (ரூபாய் ஆறாயிரம் மட்டும்).
மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000/- வீதமும் (ரூபாய் ஆயிரம் மட்டும்) இன்று (29.12.2023) முதல் ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் வரிசைப்படி சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகளில் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கென அரசால் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ரூ.220.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Read more: விவசாயிகளுக்கு நற்செய்தி- நபார்டு வங்கி சார்பில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதியில் மட்டுமே நியாயவிலைக் கடைக்கு சென்று நிவாரணத்தொகை பெற்று கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் எக்காரணம் கொண்டும் டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி தவிர பிற நாட்களில் நியாயவிலைக் கடைக்கு சென்று நிவாரணத்தொகை வழங்குமாறு கட்டாயபடுத்தக்கூடாது.
அந்தந்த குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நேரில் சென்று கைரேகை வைத்து நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ள இயலும். நெரிசலின்றி அமைதியான முறையில் நிவாரணத் தொகை வழங்கிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more: அடுத்த ஒருவாரம்- தென் மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை