இந்த ஆண்டு, விநாயக சதுர்த்தி செப்டம்பர் 18 ஆம் தேதி (திங்கள் கிழமை) இந்தியா முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிக்கையின் சிறப்பம்சமே வித்தியாசமாக உருவாக்கிய விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பது தான்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ராசாயனம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலைகளை கரைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பசுமையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு இயற்கை சார்ந்த வழிமுறைகளை தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
- களிமண், மஞ்சள், அரிசி மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் ஆன சிலைகளை பயன்படுத்துவோம், சிலைகளை அலங்கரிக்க இராசயனங்களும், செயற்கை பொருட்களும் பயன்படுத்த வேண்டாம். இதனால் நீர்நிலைகளும் சுத்தமாக இருக்கும். சிலைகளை வண்ணம் தீட்ட ஈயம் மற்றும் பாதரச அடிப்படையிலான செயற்கை வண்ணங்களை தவிர்த்து அதற்கு பதிலாக இயற்கை வண்ணங்களை பயன்படுத்தலாம்.
- பிளாஸ்டிக்கால் ஆன குடை மற்றும் மலர்மாலைகள் போன்ற கூடுதல் அலங்கார பொருட்களை அகற்றி, சிலைகளை மட்டும் நீரில் கரைக்கலாம். பிளாஸ்டிக் அலங்கார பொருட்கள் நீர் நிலைகளை மாசுபடுத்தும். இதனால் செயற்கை அலங்காரங்களை தவிர்த்து நீர் வாழ் உயிரனங்களுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுவோம்.
- ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சிலைகளை செய்வதற்கும், பந்தல்களை அலங்கரிப்பதற்கும் இயற்கை சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்துதல் மூலம் சுற்றுச்சூழலின் மாசை கட்டுப்படுத்தலாம்.
- ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ரங்கோலி ஸ்டிக்கர்கள் மற்றூம் ரசாயன வண்ணப் பொடிகளுக்கு மாற்றாக மலர்கள், அரிசி மாவு, இயற்கை வண்ணங்களை உபயோகப்படுத்தவும்.
- பண்டிகை காலத்தில் ஆற்றல் சேமிப்பு விளக்குகள் (energy saving light), மண் விளக்குகள், LED பல்புகள். பேட்டரியால் இயக்கப்படும் சரம் விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- சிலைகளை அழகு படுத்துவதற்காக நச்சு இராசயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் மட்டுமே தயாரிக்கப்படும் அலங்கார உடைகள், வண்ண பூச்சுகள், வண்ணங்கள் தாவரங்களில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்படும் (பூக்கள், பட்டை, மகரந்தங்கள், இலைகள், வேர்கள், விதைகள், முழு பழங்கள்) வெவ்வேறு பறவைகளின் இறகுகள், தாது அல்லது வண்ண கற்களை பயன்படுத்தலாம்.
- சிறிய சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை வாங்குவதற்கு மறுபயன்பாட்டு பைகள், துணிப்பைகள் பயன்படுத்துதல் சிறந்த வழியாகும்.
- அலங்கார பொருட்களை வீட்டிலேயே அகற்றி குப்பைகளை நீர் நிலைகளில் சேர்ந்தடையாமல் இவ்விழாவை கொண்டாடுவோம்.
- ஒவ்வொரு திருவிழாவிலும் பின்பற்றப்பட வேண்டிய 3R ஐ (Reduce, Reuse, Recycle) அதாவது குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி கடைபிடித்தல் தன்மையினை பின்பற்றுவோம்.
- விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு பதிலாக வீட்டிலேயே பக்கெட்டுகளில் நீர் நிரப்பி அதில் கரைத்து பின்பு அந்த களிமண்ணை வீட்டுத்தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பயன்படுத்தி இந்த ஆண்டு நீர் நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கரைக்கும் நீர் நிலைகளின் பட்டியல் ஒவ்வொரு மாவட்ட ரீதியாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது 24 உத்தரவு- முழு விவரம் உள்ளே
காவிரி விவகாரத்தில் இது தான் கடைசி வாய்ப்பு- துரைமுருகன் பளீச்