இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் வேளாண்மைத் தலைமை விஞ்ஞானிகளின் (MACS) மூன்று நாள் கூட்டம் வாரணாசியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் “ஆரோக்கியமான மக்கள் மற்றும் தற்போதைய நிலையான விவசாயம் மற்றும் உணவு முறைகள்” குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஒன்றிய வேளாண் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து, காலநிலை ஸ்மார்ட் விவசாயம், டிஜிட்டல் விவசாயம், பொது-தனியார் கூட்டாண்மை, வேளாண் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.‘தினை மற்றும் பிற பழங்கால தானியங்கள் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சி முயற்சி (Millets And Other Ancient GRains International ReSearcH Initiative-MAHARISHI))’ G20 கூட்டத்தின் முயற்சியாக விஞ்ஞானிகள் குழுவில் விவாதிக்க முன்மொழியப்பட உள்ளது.
சர்வதேச தினை ஆண்டு 2023 மற்றும் அதற்குப் பிறகு மேற்கொள்ள உள்ள ஆராய்ச்சியினை மேம்படுத்துவதையும், தினைகள் மற்றும் பிற பழங்கால தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதையும் மகரிஷி நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூட்டத்தின் கருப்பொருள் “ஆரோக்கியமான மக்கள் மற்றும் தற்போதைய நிலையான விவசாயம் மற்றும் உணவு முறைகள்” ஆகும். தொடக்க அமர்வான இன்று, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் கலந்து கொண்டார்.
இரண்டாவது நாளில், மதிய உணவிற்குப் பிறகு MACS தகவல்தொடர்பு பற்றிய விவாதம் தொடங்கும், அது மூன்றாம் நாளில் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைக்கப்பட்ட விருந்தினர் நாடுகளும் (வங்காளதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம்) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் பங்கேற்கின்றனர் .
சர்வதேச சோலார் அலையன்ஸ், சிடிஆர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை மூன்று நாள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன. விவசாயத்துறை அமைச்சகம் மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சகம் உட்பட ஏனைய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
வாரணாசிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் செழுமையான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தின் தனித்துவமான அனுபவத்தை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வந்திருந்த விருந்தினர்களுக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதிநிதிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கும் கூட்ட அரங்கு, ஹோட்டல்களில் அவர்களின் பாதுகாப்புக்கு போதுமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்று கங்கா ஆரத்தியின் ஒளிரும் காட்சியைக் காண பிரதிநிதிகள் கப்பல் சவாரிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். வந்திருக்கும் பிரதிநிதிகள் ஏப்ரல் 18 ஆம் தேதி சாரநாத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுக்கு ஏஎஸ்ஐ அருங்காட்சியகம் மற்றும் புத்த ஸ்தூபியின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் சிறப்பினை விளக்கிக்கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் ஏப்ரல் 19 ஆம் தேதி வர்த்தக வசதி மையத்திற்கு (TFC) வருகை தருவார்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை அவர்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் மாநில வேளாண் துறையின் முன்னணி நிறுவனங்களின் சிறிய கண்காட்சி TFC இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதிநிதிகளுக்கு அந்த இடத்தில் புதிதாக சமைத்த தினை உணவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
அக்ரிடெக் உட்பட 250 புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்ற 'ஒளிர்' பயிற்சி பட்டறை