பொங்கல் திருநாளை முன்னிட்டு 1,12,675 (ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து) போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறைக்கென அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9 ஆம் தேதி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நிலையில் போராட்டத்தில் பங்கேற்காத மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தமிழ்நாடு முழுவதும் 93.90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் அன்றைய தினம் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
போராட்டம் குறித்து அமைச்சர் அளித்த பதில்:
மேலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், ” தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையில் ஏற்கெனவே 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் , மற்ற 2 விதமான கோரிக்கைகளுக்கு அரசு சார்பில் ஏற்கெனவே நடைப்பெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தின் போது கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், அதனை போக்குவரத்து சங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிதி நிலை சீரானதும் நிச்சயம் வழங்கப்படும்” எனவும் தெரிவித்து இருந்தார்.
சாதனை ஊக்கத்தொகை:
இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழக அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்துறை பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.
குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
சாதனை ஊக்கத்தொகை யாருக்கு எவ்வளவு?
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2023-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் "சாதனை ஊக்கத் தொகை" வழங்கப்படும்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,12,675 (ஒரு இலட்சத்து பன்னிரெண்டாயிரத்து அறுநூற்று எழுபத்தைந்து) போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆறு கோடியே எழுபத்தைந்து இலட்சத்து எழுப்பத்து மூன்றாயிரம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
Read also:
Bus Strike: கோயம்பேடுக்கு விசிட் அடித்த அமைச்சர்- அரசின் முடிவு என்ன?
நட்ட மாத்திரத்தில் லாபம்- டர்க்கி பிரவுன் ரக அத்தி சாகுபடி முறைகள்!