கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால்,7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வருமானவரிச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே காலக்கெடுவிற்குள் வருமான வரித் தாக்கல் செய்வதே நல்லது.
காலக்கெடு
2021-22ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, விரைவில் வருமான வரித் தாக்கல் செய்யும்படி வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. மறுபுறம், கடைசி தேதியை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாமதக் கட்டணம்
கடைசி தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். கடைசி தேதிக்கு பிறகு வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டுமெனில் 5000 ரூபாய் வரை தாமதக் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு தாமதக் கட்டணம் 1000 ரூபாய்.இவ்வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமதக் கட்டணத்துடன் வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
200% வரை அபராதம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் உங்கள் மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்கக்கூடும்.
வருமான வரித் தொகையில் 50% முதல் 200% வரை அபராதமாக விதிப்பதற்கு அதிகாரம் உள்ளது. இதுபோக வட்டியும் செலுத்த நேரிடும்.
சட்ட நடவடிக்கை
10,000 ரூபாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியவர்கள் வருமான வரித் தாக்கல் செய்யாவிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் இந்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
சிறை தண்டனை
இவர்களுக்கு சட்டப்படி 6 மாதம் முதல் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் விதிக்க விதிகள் வழிவகை செய்கிறது. எனவே சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தவிர்க்க, காலக்கெடுவிற்குள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது.
மேலும் படிக்க...