
வருமான வரி செலுத்துவோர் , வரும் அக்டோபர் 1 முதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் வரும் அடல் பென்சன் யோஜனா திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டத்தில்18 முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமகன்கள், வங்கி அல்லது தபால் அலுவலக கிளைகள் மூலம் சேரலாம்.
அடல் பென்சன் யோஜனா (Adal Pension Yojana)
அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேருவோருக்கு, அவர்களின் பங்களிப்பு தொகையை பொறுத்து 60 வயதுக்கு மேல், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியமாக திரும்ப அளிக்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்த சந்தாதாரர் முன்னரே இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். ஒருவேளை சந்தாதாரர், அவரது மனைவி என இருவரும் இறந்துவிடும் பட்சத்தில், 60 வயது வரை சேர்ந்த ஓய்வூதிய பலன்கள் அவர்கள் நியமனம் செய்த நபருக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: 'அக்டோபர் 1, 2022 முதல் வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார்கள். "வருமான வரி செலுத்துபவர்" என்பது வருமான வரிச் சட்டம், 1961ன் படி திருத்தப்பட்ட 'வருமான வரி செலுத்த வேண்டிய நபர்' என்று பொருள்படும்.
புதிய விதி (New Law)
புதிய விதிகளின்படி, அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு திட்டத்தில் இணைந்த சந்தாதாரர், விண்ணப்பித்த தேதி அல்லது அதற்கு முன்னதாக வருமான வரி செலுத்துபவராக இருப்பது
கண்டறியப்பட்டால், அவரது அடல் பென்சன் யோஜனா கணக்கு முடிக்கப்பட்டு, அதுவரையிலும் செலுத்திய ஓய்வூதிய தொகை திருப்பி செலுத்தப்படும்.
ஜூன் 4ம் தேதி கணக்கீட்டின்படி, தேசிய ஓய்வூதிய திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் 5.33 கோடி சந்தாதாரர்கள் இருப்பதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதிம் பந்தோபாத்யாய தெரிவித்துள்ளார்.
இரு ஓய்வூதிய திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.7,39,393 கோடி எனவும், அடல் பென்சன் யோஜனா திட்ட சந்தாதாரர்களின் எண்ணிக்கை 3.739 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
கை நிறைய பென்சன் பெற இந்தத் திட்டத்தில் சேருங்கள்!
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் சலுகை: பார்லிமென்ட் குழு பரிந்துரை!