தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு சில ஆயிரங்கள் கூடுதலாகக் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும்போது, மாநில அரசுகளும் அதற்கு ஏற்ப, தங்கள் ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது, தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது உயர்த்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
14 % உயர்வு (14% increase)
தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
ரூ.8,724 கோடி (Rs.8,724 crore)
அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்குத் தோராயமாக ரூ.8,724 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
விதி 110-ன்கீழ்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2022 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அரசாணை
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி, 1-1-2022 முதல் 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறும் அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வளவு அதிகரிக்கும்?
இதன் மூலம் அகவிலைப்படி குறைந்த பட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
தேவை அதிகரிப்பு மற்றும் லாபகரமான ஒப்பந்தமாக மாறியுள்ள சீரகம் சாகுபடி!