மத்திய அரசின் உயரதிகாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர், இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடைக்கு வந்து கொள்முதல் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மழைகாலம் என்பதால், தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் இதனை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். 17 சதவீதத்திற்கு மேல் ஈரதப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததால், டெல்டா விவசாயிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தார்கள். ஈரப்பத அனுமதி அளவை அதிகாரிக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தார்கள். விவசாயிகளின் கோரிக்கை குறித்து, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசின் உயரதிகாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர், இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் ?
இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன் ‘’ஒவ்வொரு வருசமுமே குறுவை நெல் அறுவடை சமயத்துல மழை பெய்து, விவசாயிகள் கடுமையான பாதிப்புகளை சந்திசிகிட்டு இருக்கோம். 17 சதவீதத்துக்கு அதிகமா ஈரப்பதம் உள்ள நெல்லை, கொள்முதல் நிலையங்கள்ல வாங்க மறுக்குறாங்க. நாலஞ்சி நாள்களுக்கு நெல்ல வெயில்ல காய வச்சி,17 சதவீத அளவுக்கு ஈரப்பதத்தை குறைக்க, நிறைய செலவு செய்ய வேண்டியதாயிடுது. இதனால ஈரப்பத அனுமதி அளவை 22 சதவீதமா உயர்த்தணும்னு விவசாயிங்க தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்கோம்.
போன வருஷம் குறுவை நெல் கொள்முதல் நூறு சதவீதம் நிறைவடைஞ்ச பிறகு தான், ஈரப்பத அளவை 19 சதவீதமா அதிகரிச்சி அறிவிப்பு வெளியிட்டுச்சு. அதனால விவசாயிங்களுக்கு எந்த பிரயோஜனும் இல்லாமப் போயிடுச்சு, ஆனா இந்த தடவை கொஞ்சம் ஆறுதலா இருக்கு. இன்னும் பத்து சதவீத நெல், கொள்முதல் செய்யப்பட வேண்டியிருக்கு. ஈரப்பத அனுமதி அளவை 19 சதவீதமா அதிகரிச்சி, மத்தியஅரசு இப்ப அறிவிப்பு வெளியிட்டதால, இப்ப அறுவடை செஞ்சிக்கிட்டு இருக்குற விவசாயிங்களுக்கு பிரயோஜனமா இருக்கு. ஆனா இந்த அறிவிப்பை இன்னும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே வெளியிட்டிருந்தா, நிறைய விவசாயிங்க பலன் அடைஞ்சிருப்பாங்க.
இது ஒருபக்கம் இருக்கட்டும்... .சம்பா நெல் கொள்முதலுக்கு 17 சதவீதம் ஈரப்பதம் நிர்ணயம் செய்றதை ஓரளவுக்கு ஏத்துக்கலாம்... காரணம் அப்ப வெயில் காலம் ஆரம்பிச்சிடுது. ஆனா மழைகாலத்துல தான் குறுவை நெல் அறுவடைக்கு வரும்ங்கறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். இந்த யதார்த்த உண்மை தெரிந்திருந்தும் கூட, குறுவை நெல்லுக்கும் 17 சதவீதம் தான் ஈரப்பதம் அனுமதிப்போம்னு மத்திய அரசு சொல்றது எந்த விதத்துல நியாயம். இதுக்கு ஒரு நிரந்தர உத்தரவு பிறப்பிக்கணும்... 22 சதவீதம் வரை அனுமதிச்சி, நிரந்த அரசாணை வெளியிடணும்’’ என தெரிவித்தார்.
மேலும் படிக்க
தீபாவளிக்குப் பிறகும் சிறப்பான சலுகை: 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் வாட்ச் இலவசம்!