உள்நாட்டு உற்பத்தியை மதிப்பீடு செய்த பிறகு , சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
நடப்பு 2022-23 சந்தைப்படுத்தல் ஆண்டிற்கு 60 லட்சம் டன் சர்க்கரையினை ஏற்றுமதி செய்ய உணவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் உள்நாட்டு சர்க்கரை உற்பத்தி, பருவ நிலை மாற்றங்களால் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டில் இந்தியா 110 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவிக்கையில், “சர்க்கரை ஏற்றுமதியை உயர்த்துவது குறித்து நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. உள்நாட்டு உற்பத்தியை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், எதிர்பார்க்கப்படும் உற்பத்தியின் இறுதி புள்ளிவிவரங்களைப் பொறுத்து மார்ச் மாதத்தில் முடிவெடுப்போம்" என்றார்.
மேலும் பேசிய அவர், சர்க்கரை உற்பத்தி செய்யும் சில மாநிலங்களில் மோசமான வானிலை காரணமாக நடப்பாண்டில் உற்பத்தி அளவு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்திய சர்க்கரை ஆலைகளின் கூற்றுப்படி. அசோசியேஷன் (ISMA), சர்க்கரை உற்பத்தி நடப்பு ஆண்டில் 5% சரிந்து 340 லட்சம் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கரும்புச்சாறானாது பெருமளவில் எத்தனால் உற்பத்திக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 2021-2022 சந்தைப்படுத்தல் ஆண்டில், சர்க்கரை உற்பத்தி 358 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
எத்தனால் உற்பத்திக்காக சுமார் 45 லட்சம் டன் மதிப்பிலான குறைந்த கலோரி கொண்ட சர்க்கரையாக மாற்றப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் 121 லட்சம் டன்னாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டில் 358 லட்சம் டன் அளவில் மகாராஷ்டிரா மாநிலம் சர்க்கரை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவினை போன்று உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 102 லட்சம் டன்னிலிருந்து 101 லட்சம் டன்னாகவும், கர்நாடக மாநிலத்தில் 60 லட்சம் டன்னிலிருந்து 56 லட்சம் டன்னாகவும் குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய சர்க்கரை ஆலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் சர்க்கரை உற்பத்தி 3.42 சதவீதமாக அதிகரித்து 193.5 லட்சம் டன்னாக இருந்தது என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 5 ஆயிரம் லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இதன்மூலம் சர்க்கரை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதல் நாடாகவும், சர்க்கரை ஏற்றுமதியில் உலகளவில் இரண்டாவது இடத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
என்னங்க சொல்றீங்க..24 வருஷமா தேங்காயை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறாரா?
பள்ளி மாணவர்களின் செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த ஹைபிரிட் ராக்கெட்