கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த ஏதுவாக வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் இந்த அறிவிப்பு, பெங்களூரு வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார இழப்பு (Economic loss)
உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த 2 ஆண்டுகளாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இதனால் தனிமனிதர்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
கட்டுப்பாடுகள் (Restrictions)
இதன் ஒருபகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், கொரோனா வைரஸின் 3வது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு அன்றாடம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெங்களூருவில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது. ஒரே நகரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேல் இருப்பதால், மாநகராட்சி வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், பலவிதக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
31ம் தேதி வரை 144
இது மட்டுமல்லாமல், கொரோனா பரவலைத் தடுக்க ஏதுவாக மாநகராட்சி, சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாப் பரவலை தடுக்கும் வகையில் ஜனவரி 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையர் கமல்பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பெங்களூருவில் 19ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த 144 தடை உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
தடை
144 தடை அமலில் இருக்கும்போது பெங்களூருவில் பேரணி, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது.
200 பேருக்கு அனுமதி (Admission for 200 people)
திருமண நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. மேலும், ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை, கர்நாடக நோய் பரவலைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...