செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் அதிகமாக உள்ளனர்.தொற்று பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை பலக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் (Corona Virus)
பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை. சமூக இடைவெளி, முக கவசம் அணிவது இல்லை. தவிர, கடைகளுக்கு வருவோர், வெளியில் சென்று வீடு திரும்புவோர், 'சானிடைசர்' கொண்டு கைகளை சுத்தம் செய்வதில்லை.
தடுப்பு முறைகள் (Prevention Methods)
முக கவசம் அணிவது, சானிடைசர் கொண்டு கை சுத்தம் செய்வது உள்ளிட்ட, தடுப்பு முறைகளிலும் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்க, சுகாதாரம், உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக புனிததோமையார்மலை, தாம்பரம், வண்டலுார், காட்டாங்கொளத்துார், திருப்போரூர், ஆகிய பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
தற்போது மாவட்டத்தில், 1,061 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் வசதிக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், தினமும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கேயே கொரோனா பரிசோதனைகளும் நடக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி, கொரோனா விதிகளை கடைபிடிக்க, கடுமையான நடவடிக்கையை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!