உலகமே கொரோனாவைக் கண்டு அஞ்சிய வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்தியா முழுவதும் தடுப்பூசி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐ.நா., (UN) அமைதிக் குழுவினருக்கு, இந்திய அரசு பரிசாக அறிவித்த இரண்டு லட்சம், 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் (Corona Vaccine), இன்று அனுப்பி வைக்கப்படுகின்றன.
'கோவிஷீல்டு (Covishield) மற்றும் 'கோவாக்சின் (Covaxin) தடுப்பூசிகள், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 70 நாடுகளுக்கு, ஆறு கோடி டோஸ், கொரோனா தடுப்பூசிகளை (Corona Vaccine), இந்திய அரசு வழங்கியுள்ளது. ஐ.நா.,வின் அமைதிக் குழுவுக்கு, இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்க உள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் அறிவித்தார். உலகம் முழுவதிலும் இருந்து, 121 நாடுகளைச் சேர்ந்த, 85 ஆயிரத்து, 782 பேர், ஐ.நா., அமைதிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.நா.-வுக்கு தடுப்பூசி
இரண்டு லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை, இந்திய அரசு, இன்று ஐ.நா. அமைதிக்குழுவிறகு அனுப்பி வைக்கிறது. தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட, 'கத்தார் ஏர்வேஸ்' விமானம், மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து, இன்று புறப்பட்டு, ஐரோப்பிய நாடான டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றடைகிறது. அங்கு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின் அமைதிக் குழுவினருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்திய அரசின் உதவிக்கு, ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ கட்டர்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பாராட்டு
பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய அரசின் செயலை, அமெரிக்க எம்.பி., வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து, கலிபோர்னியாவைச் சேர்ந்த, ஜனநாயக கட்சி எம்.பி., கேரன் பாஸ் கூறியதாவது: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, 'கோவிஷீல்டு' தடுப்பூசியை இந்திய அரசு அளித்துள்ளது. மனிதாபிமானத்தின் மீது, இந்தியாவுக்கு உள்ள அழுத்தமான நம்பிக்கையை, இந்த செயல் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
ஈரோட்டில் ஏல முறையில் நாட்டு சர்க்கரை மற்றும் பூக்கள் விற்பனை
கோடை உழவுக்காக நிலத்தை தயார் செய்யும் விவசாயிகள்!