இந்தியாவின் மீன் உற்பத்தி 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னை எட்டி சாதனை படைத்திருப்பதாக, ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
சாகர் பரிக்கிராமா திட்டத்தின் 5-வது கட்ட யாத்திரை கடந்த 17 ஆம் தேதி மும்பையில் தொடங்கி நேற்று (மே 19, 2023) கோவாவில் முடிவடைந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ரூபாலா, பல்வேறு விதமான மீன் வகைகளை உற்பத்தி செய்யும் தொன்மை வாய்ந்த இயற்கை வளங்கள், இந்தியாவில் உள்ளது என்றார். உணவு, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, வருமானம் என பல வகைகளில் நமக்கு உறுதுணையாக இருக்கும் மீனில், உடல் ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கும் துணைபுரியும் ஒமேகா -3 ஃபேட்டி அமிலம் அதிகளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மீன்வளத்துறை 2.8 கோடி பேருக்கு வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கியிருப்பதுடன், பலரை தொழில்முனைவோராகவும் மாற்றியிருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் மீன்வளத்துறை, மீன் உற்பத்தியை 22 மடங்கு வரை அதிகரித்து வர்த்தகம் குவிக்கும் துறையாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 1950-51 ஆம் நிதியாண்டில் 7.5 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி, கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் 162.48 லட்சம் டன்னாக அதிகரித்து சாதனை படைத்து இருப்பதாகவும், இது கடந்த 2020-21 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 10.34 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உலக நாடுகளில் மீன் உற்பத்தியில் 8 சதவீதத்தை பூர்த்தி செய்து இந்திய மிகப்பெரிய மூன்றாவது மீன் உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய ஒன்றிய அமைச்சர் ரூபாலா, மீன்வளர்ப்பில் உலகின் இரண்டாவது முன்னணி நாடாகவும் இந்தியா திகழ்வதாக கூறினார்.
மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்கள், சலுகைகள், மீன் இனப்பெருக்க தொழில்நுட்பம் உள்ளிட்ட ஒன்றிய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
மீன்பிடி உற்பத்தியை அதிகரிப்பது, உற்பத்தித்திறன் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், ஏற்றுமதி மற்றும் நிறுவன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது குறித்தும் அமைச்சர் வலியுறுத்தி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன் விவசாயிகள், மீனவர்கள் போன்ற பயனாளிகளுடன் கலந்துரையாடிய ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா அவர்களுக்கான கிஷான் கிரெடிட் கார்டு, மீன்பிடி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் காண்க: