வேளாண்மை விற்பனை குழு சார்பில் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தி (Cotton) விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயனடைய மறைமுக ஏலம் (Indirect auction) நடைபெற்று வருகிறது. இந்த மறைமுக ஏலத்தின் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று வேளாண்மை விற்பனை குழு தெரிவித்துள்ளது.
மறைமுக ஏலம்
அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், மறைமுக ஏல நடவடிக்கையில் கலந்து கொண்டு அதிகபட்ச விலைக்கு பருத்தி (Cotton) விளை பொருளை விற்பனை செய்து பயன்பெறலாம். அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்க ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிட்டங்கி, 600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனை கூடம், 400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஏலக்கொட்டகை, இரண்டு உலர்களங்கள் மற்றும் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு (Refrigerated warehouse) உள்ளன. எனவே விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற உள்ள மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு தங்கள் பருத்தி விளை பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.
தேங்காய் ஏலம்
இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தென்னை விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் உற்பத்தி செய்த தேங்காய்களை (Coconut) அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற வியாழக்கிழமை தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்டு ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15 தென்னை விவசாயிகள், மறைமுக ஏல நடவடிக்கைகளில் கலந்து கொண்டு சுமார் 4 ஆயிரத்து 258 காய்களை அதிகபட்சமாக காய் ஒன்றுக்கு ரூ.13.50 என விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.
விவசாய நிறுவனங்கள்
மறைமுக ஏலத்தில் 37 வியாபாரிகள் (Merchants) மற்றும் 3 விவசாய நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மேலும் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 103 மதிப்பிலான வர்த்தகம் (Trade) நடைபெற்றது. எனவே ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டு, தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய்களை அதிக விலைக்கு விற்பனை செய்திட, ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!
குறைந்தது கருவேப்பிலை விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்