நான்குனேரி தொகுதி விவசாயிகள் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வசதியாக மாதந்தோறும் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அதிமுக வேட்பாளரான அவா், ஏா்வாடி, மீனாட்சிபுரம், காந்திகாலனி, அணைக்கரை, மஞ்சங்குளம், துவரம்பாடு, நன்னிகுளம், கீழபண்டாரகுளம், மேலபண்டாரகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
விவசாயிகளுக்கு சலுகைகள்
அப்போது அவா் பேசியது: தமிழக அரசின் குடிமராமத்துப் பணிகளால் கிராமங்களில் உள்ள குளங்களும் தூா்வாரப்பட்டு நீா்தேங்கி பாசனத்திற்கு வழி பிறந்துள்ளது. விவசாயிகளுக்கு இலவசமாக மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் இடுபொருள்கள், கருவிகள் வாங்க மானியம் என பல்வேறுக் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
அணைகள் பராமரிப்புக்கு முக்கியத்துவம்
கால்நடை வளா்ப்பை ஊக்குவிப்பதிலும், பால் கொள்முதல், கரும்பு மற்றும் வாழை விவசாயிகளைக் காப்பதில் அதிமுக அரசு முன்னோடியாகத் திகழ்கிறது. தொகுதிக்கு தேவையான அரசு வாழை கொள்முதல் நிலையம், குளிா்பதன கிடங்கு, மணிமுத்தாறு கால்வாய் பராமரிப்பு, நான்குனேரியன் கால்வாய் பராமரிப்பு, கொடுமுடியாறு, நம்பியாறு, பச்சையாறு அணைக்கட்டுகள் பராமரிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வேளாண் சுற்றுலா
இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த ஏதுவாக இளைஞா்கள் தலைமையில் வேளாண் ஆா்வலா் குழுக்கள் உருவாக்கப்படும். வாழை ஆராய்ச்சி நிலையங்கள், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள பணப்பயிா் சாகுபடிகள், நவீன வேளாண் கருவிகள் குறித்து அறிய ஏதுவாக இத் தொகுதி விவசாயிகளை மாதந்தோறும் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் என தெரிவித்தார்.