நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வல்லுனர்கள் அப்பகுதிகளில் நேரடி களஆய்வு நடத்தினர்.
மரவள்ளிக் கிழங்கு ஓராண்டுப் பயிர். தமிழகத்திலும் கேரளத்திலும் அதிக ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப்பொருளாகவும் உணவாகவும் மரவள்ளிக்கிழங்கு பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கிகொள்ளவதுடன் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் நல்ல உணவைத் தரும் பயிராகவும் உள்ளது. இதனால், மரவள்ளிக் கிழங்கை மண்ணுக்குள் இருக்கும் வைரம் என அழைக்கின்றனர்.
மாவுப்பூச்சி தாக்குதல்
மரவள்ளிக் கிழங்கை மூலப்பொருளாகக்கொண்டு செயல்படும் ஜவ்வரிசி ஆலைகளும் ஸ்டார்ச் தொழிற்சாலைகளும் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் அதிகம் உள்ளன. எனவே இப்பகுதிகளில், முக்கிய பயிராக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 230 ஹெக்டேர் பரப்பளவு மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
வேளாண் வல்லுநர்கள் ஆய்வு
அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக தகவல் தெரிவித்ததையடுத்து, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி முதல்வர் இல.புகழேந்தி தலைமையிலான பூச்சியியல் குழுவினர் நாமரிகிரப்பேட்டை, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முள்ளுவாடி-1 மற்றும் வெள்ளை தாய்லாந்து ஆகிய மரவள்ளி ரகங்களில் மாவுப்பூச்சு தாக்குதல் அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர்.
பூச்சி தாக்கத்துடன் புதிதாக காணப்பட்ட மரவள்ளிக்கிழங்குகளையும், மாவுப்பூச்சியின் மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக வேளாண் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆய்வின் முடிவில் மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று வேளாண் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
விவாசாயிகளுக்கு அறிவுரை
-
மாவுப்பூச்சியால் பாதிக்கப்பட்ட மரவள்ளி கிழங்கு வயல்களிருந்து விதை கரணைகளை தோ்வு செய்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
-
மரவள்ளி சாகுபடி செய்யப்படும் வயல்களில் இரு நாட்களுக்கு ஒருமுறை நீா்ப்பாசனம் செய்யப்படுவதால் மாவுப்பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையும். எனவே நீா்ப் பாசனம் செய்வது மிக அத்தியாவசியமாகும்.
-
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பயிர் சுழற்சி முறையை கடைபிடிக்க வேண்டும்.
-
மரவள்ளிப் பயிர்களில் மாவுப்பூச்சி தாக்குதல் காணப்பட்டவுடன் ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட மரவள்ளி குச்சிகளைப் பிடுங்கி எரித்து விடுதல் வேண்டும். அறுவடைக்குப் பின்னர், மரவள்ளிக் குச்சிகளை வயல்களிலேயே எரிக்காமல் விட்டு விடுவதால் அதிலுள்ள மாவுப்பூச்சிகள் புதிதாக நடப்பட்ட இளம் மரவள்ளி பயிருக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
-
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உயர் ரக அதிக விளைச்சல் கொண்ட மரவள்ளி ரகங்களை விளைநிலங்களில் நடும் முன்பு ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய போரசிரியா்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.
இந்த கள ஆய்வின்போது நாமக்கல் தோட்டக்கலைத் துணை இயக்குநா் கண்ணன், கோவை பூச்சியியல் துறை பேராசிரியா் நா.முத்துகிருஷ்ணன், சா.நெல்சன், மு.கார்த்திகேயன், நோயியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.ஆா்.வெங்கடாசலம், சேந்தமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குநா் எம்.யோகநாயகி, நாமகிரிப்பேட்டை உதவி இயக்குநா் சு.சுகந்தி மற்றும் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்து ஆய்வு மேற்கொண்டனர்.