கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்குவதில், 'குஜராத் மாடல் (Gujarat Model) திட்டத்தை பின்பற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவில், தவணை முறையில், விவசாயிகளுக்கு பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் விவசாயம் சார்ந்த இரண்டாவது பெரிய தொழிலாக, சர்க்கரை ஆலைகள் (Sugar Factory) உள்ளன. விவசாயிகள் கரும்பு பயிரிட்டு, அவற்றை ஆலைகளுக்கு வழங்குவர். இதற்கு ஆலைகள், 14 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால், இதை செயல்படுத்த, எந்த சர்க்கரை ஆலையாலும் முடியவில்லை.
விவசாயிகள் பாதிப்பு
கரும்பு விற்பனை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் துவங்குகிறது. இந்த ஆண்டு மட்டும், ஜனவரி 31 வரை, கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள், 16 ஆயிரத்து, 833 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. கோடிக்கணக்கில், சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்துள்ளதால், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிலங்களில், கரும்பு விவசாயிகள் (Sugarcane farmers) பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், இதேபோல், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் பணம் வழங்காமல், லட்சக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்தன.
இதையடுத்து, குஜராத் அரசு, ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, குறிப்பிட்ட காலக் கெடுவில், பகுதி பகுதியாக,கரும்பு விவசாயிகளுக்கு பணத்தை வழங்க,சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதை ஏற்று, சர்க்கரை ஆலைகளும் பணத்தை வழங்கின. இதனால், குஜராத்தில், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்துள்ள பணம், மிக குறைவாகவே உள்ளது. ஆனால், பல மாநிலங்களில், சர்க்கரை ஆலைகள் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டு, கரும்பை பயிரிடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆலோசனை
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதையடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு, சர்க்கரை ஆலைகள், பணத்தை நிலுவையில் வைக்காமல் தருவதற்கு திட்டம் ஒன்றை வகுக்கும்படி, மத்திய அரசை, 'நிதிஆயோக்' வலியுறுத்தியது. இதன்படி, மத்திய அரசு, உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலர் சுதான்ஷு பாண்டே, இணைச் செயலர் சபோத் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன், பல்வேறு மாநிலங்களின் விவசாயத் துறை மூத்த அதிகாரிகள், சர்க்கரை அதிகளவில் உற்பத்தி (Production) செய்யும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, பீஹார், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
குஜராத்தில் வழங்கப்பட்டுள்ளது போல், அனைத்து மாநிலங்களிலும் தவணை முறையில் (Installment), விவசாயிகளுக்கு பணம் வழங்குவது பற்றி ஆலோசிக்கும்படி, உயர்மட்டக் குழுவிடம், நிடி ஆயோக் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால், குஜராத் பாணியை பின்பற்றுவது பற்றி உயர்மட்டக் குழு ஆலோசித்து வருகிறது.
சிறப்பு நிதித் திட்டம்
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க, சிறப்பு நிதியை உருவாக்கும் திட்டமும் உள்ளது. குறைந்த விலையில் கரும்பு கொள்முதல் (Purchase) செய்யப்பட்டால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை, இந்த நிதி வாயிலாக சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தி அளவை வைத்து, ஆலையும், விவசாயிகளும், வருவாயை பகிர்ந்து கொள்வது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளினால் தான், கடந்த மூன்று ஆண்டுகளில், விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிலுவையில் வைத்திருக்கும் தொகை குறைந்துள்ளது என்று உயர்மட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விதைக்கிழங்கு உற்பத்தி தொழில்நுட்பத்தால் வருமானம் தரும் மூலிகைச் செடிகள்!
வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!