தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி (Paddy Cultivation) நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர, பொங்கல் கரும்பும் (Sugarcane) சாகுபடி செய்யப்படுகின்றன.
கரும்பு நடவு
வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை போன்ற பகுதிகள் என மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்புகள் நடவு (Sugarcane planting) செய்யப்படும். இந்த கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும்.
விதை கரும்புகள்
இப்போது நடவு செய்தால் தான் ஜனவரி மாதம் அறுவடைக்கு (Harvest) தயாராகி விடும். இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் தற்போது பொங்கல் கரும்பு நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இதற்காக விதைக்கரும்புகள் தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சையை அடுத்த காட்டூர் பகுதியில் விதைக்கரும்புகள் நன்கு வளர்ந்துள்ளன. இந்த கரும்புகளை வெட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். வெட்டி எடுக்கப்பட்ட கரும்புகளில் இருந்து தோகைகளை அகற்றிவிட்டு, அதை, சிறு, சிறு துண்டுகளாக வெட்டி விதை கரும்புகளாக தயார் செய்து வருகிறார்கள். ஒரு கரும்பை 5 அல்லது 6 துண்டுளாக வெட்டி வருகிறார்கள். வெட்டப்பட்ட கரும்புகளை ஒரு இடத்தில் குவியலாக வைத்துள்ளனர்.
விவசாயிகள் தீவிரம்
குவித்து வைத்துள்ள விதைக்கரும்புகளை விலைக்கு வாங்கி செல்வதற்காக விவசாயிகள் சாக்குகளுடன் வந்திருந்தனர். தங்களுக்கு தேவையான அளவுக்கு விதைக்கரும்புகளை வாங்கி சென்றனர். இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதை கரும்புகளை தயார் செய்து நடவு செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு சாகுபடி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கரும்பு 10 மாத பயிராகும். இப்போது நடவு செய்தால் தான் பொங்கல் பண்டிகை (Pongal) தினத்திற்கு விற்பனை செய்ய தயாராக இருக்கும். 1 துண்டு விதைக்கரும்பு 2 ரூபாய் 10 காசு ஆகும். 1 ஏக்கர் பரப்பளவுக்கு 15 ஆயிரம் துண்டு விதைக்கரும்பு தேவைப்படும். தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுதல், விதைக்கரும்பு வாங்குவது என ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகும் என்றனர். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் (Ration shops) குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டதால் இந்த ஆண்டு செங்கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!