உலகில் வளர்ந்து வரும் நாடுகள் சந்திக்கும் இரு பெரும் சவால்களாக வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் உள்ளன. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அந்த வகையில் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்பது வறுமையாகும்.
உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது.
'மனித உரிமை மற்றும் கண்ணியம் மிக்க உலகை உருவாக்குவதற்கு பின்தங்கியவர்களையும் ஒன்றிணைந்து வாருங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
வறுமை
முன்பெல்லாம் உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச் சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலை தான் வறுமை எனப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.150-க்கும் கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒரு நாள் வருமானம் ரூ.75-க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே தான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளி விபரங்களின் படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கின்றது. தெற்காசியாவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் இருந்தாலும் உலக வங்கி அறிக்கைப் படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டு மொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.