தமிழக சுற்றுலாத் துறை பங்களிப்புடன் மாமல்லபுரம் கடலோர பகுதியில், சர்வதேச காற்றாடி திருவிழாவை மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக இப்போட்டி நடைபெறுகிறது என்பதால், அதற்கான ஏற்பாடுகள் படுஜோராக நடக்கின்றன. 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29 முதல் நேற்று முன்தினம் வரை மாமல்லபுரத்தில் நடந்தது. இப்பகுதியை அறியாத பல வெளிநாட்டவரும், தற்போது அறிந்து வியந்தனர். இப்போது சர்வதேச காற்றாடி திருவிழாவும், மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.
காற்றாடி திருவிழா (Wind Festival)
குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம், தமிழக சுற்றுலாத் துறையின் பங்களிப்புடன், நாளை மறுநாள் துவங்கி ஆகஸ்ட் 15 வரை, சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்துகிறது. சென்னை, பொள்ளாச்சி பகுதிகளில், வெப்ப காற்று பலுான் விழாவை, ஆண்டுதோறும் நடத்தும் நிறுவனம், தமிழகத்தில் முதல்முறையாக, மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்துகிறது. மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின், திறந்தவெளி வளாக கடற்கரை பகுதியில், இவ்விழா நடக்கிறது.
சர்வதேச காற்றாடி திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலே யா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 80 காற்றாடி கலைஞர்கள், பிரமாண்ட வண்ண காற்றாடிகள் பறக்க விடுகின்றனர். தமிழக கலாசாரம் கருதி, மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளுவர் உருவம், ரசிகர்களை கவரும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
நுழைவுக்கட்டணம் (Entry Fees)
பாராசூட்டில் பயன்படுத்தும் நைலானில் தயாரிக்கப்பட்ட, 3 அடி முதல் 20 அடி உயரம் காற்றாடிகள் பறக்க விடப்படும். காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். மூன்று நாட்கள் இரவில், அரங்கங்களில் பல்வேறு வகையான வித்தியாசமான உணவு வகைகளை ருசிக்கலாம். பன்னாட்டு இசையை ரசிக்கலாம். பிரமாண்ட காற்றாடி செய்முறை விளக்கம் காணலாம். பெரியவர்களுக்கு, தலா 150 ரூபாய் நுழைவுக்கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு இலவசம். விபரங்களுக்கு, www.tnikf.com என்ற இணையதளத்தை காணலாம்.
பறவைகளுக்கு பாதிப்பு
காற்றாடி விழா நடத்த 15 ஏக்கர் திறந்தவெளி இடம், காற்றாடி கலைஞர்கள் தங்க இடம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பங்களிக்கிறது. ரசாயனம், மாஞ்சா கலந்த காற்றாடி பறக்கவிடுவதால், பறவைகள், விலங்கிற்கு பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் படிக்க
அதிசய கிணறுகளை இணைக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.!
இலவசங்களை அளிப்பதால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மோடி பேச்சு!